26000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்: தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை

26000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்: தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை
Updated on
2 min read

பட்ஜெட் எதிர்பார்ப்பு காரணமாக திங்கள் கிழமை சென்செக்ஸ் புதிய உச்சத்தைத் தொட்டது. 26000 புள்ளிகளை முதல் முறையாக தொட்டு, 26100 புள்ளிகளில் முடிவடைந்தது. இதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 7787 புள்ளியில் முடிவடைந்தது.

தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் கட்டுமானத்துறை பங்குகள் சந்தையின் ஏற்றத்துக்கு காரணமாக இருந்தன. மாறாக வங்கி, எண்ணெய் எரிவாயு பங்குகளில் விற்கும் போக்கு அதிகமாக இருந்தன. அதிகபட்சமாக ஐடி குறியீடு 3 சதவீதம் உயர்ந்தது.

மிட்கேப் குறியீடு 0.12 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.60 சதவீதமும் உயர்ந்தன. பட்ஜெட் சாதகமாக இருக்கும் போது நிஃப்டி 7900 புள்ளிகளுக்கு மேலே கூட இந்த வாரத்தில் செல்ல வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

சென்செக்ஸ் பங்குகளில், டாடா பவர், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் டாக்டர் ரெட்டீஸ் ஆகிய பங்குகள் அதிகம் உயர்ந்தன. மாறாக ஹெச்டிஎப்சி வங்கி, ஓஎன்ஜிசி, கெயில், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் சரிந்து முடிவடைந்தன.

ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கி 0.37 சதவீதமும், ஹேங்செங் 0.02 சதவீதமும் சரிந்து முடிவடைந்தன. சீனாவின் ஷாங்காய் காம்போசிட் 0.03 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தது.

ஐடி பங்குகள் உயர்வு

டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு சரிந்து 60.01 ரூபாயாக முடிந்ததால் தகவல் தொழில்நுட்பத்துறை (ஐடி) பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன. ஐடி குறியீடு சதவீதம் உயர்ந்தது. வெள்ளிக்கிழமை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முடிவுகள் வர இருக்கும் சூழ்நிலையில் ஐடி பங்குகள் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டிசிஎஸ் 3.06 சதவீதம், ஹெக்சாவேர் 2.06 சதவீதம், விப்ரோ 1.86சதவீதம், ஹெச்.சி.எல். டெக் 1.85 சதவீதம் உயர்ந்தன.

ரயில் பங்குகள் உயர்வு

ரயில்வே பட்ஜெட் எதிர்ப் பார்ப்பு காரணமாக ரயில் துறை பங்குகள் திங்கள் கிழமை வர்த்தகத்தில் உயர்ந் தது. டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனப்பங்கு 13 சதவீதம் உயர்ந்து. டிட்டகார் வேகன் 4.99 சதவீதமும், கெர்னாக்ஸ் மைக்ரோசிஸ்டம் 4.38 சதவீதமும் உயர்ந்து முடிவடைந்தது. இந்த பங்குகள் வெள்ளிக்கிழமையும் ஏற்றத்தில் முடிவடைந்தன.

ரயில்வேயில் அந்நிய முதலீட்டை கொண்டுவருவது, ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்துவது போன்ற அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு காரணமாக இந்த பங்குகள் விலை உயர்ந்தன.

சரிந்த பங்குகள்

சென்செக்ஸ் 26000 புள்ளிகளை கடந்திருந்தாலும் பல பங்குகள் இன்னும் உயராமலே இருக்கின்றன. கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து சென்செக்ஸ் 32 சதவீதம் உயர்ந்திருக்கிறது. பிஎஸ்இ 500 குறியீடு 41 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் பல பங்குகள் எதிர்மறை வருமானத்தை கொடுத்திருக் கின்றன.

குறிப்பாக சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும் ஐடிசி பங்கு இந்த இடைப்பட்ட காலத்தில் 5 சதவீதம் சரிந்திருக்கிறது. மேலும் ஐடியா செல்லுலர் 21 சதவீதம், கிங்பிஷர் 51 சதவீதம், ஜெட் ஏர்வேஸ் 22 சதவீதமும் சரிந்திருக்கின்றன.

இதுபோல பல பங்குகள் இந்த இடைப்பட்ட காலத்தில் சரிந்திருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in