

சென்னை: ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு தொடங்கி அறிவியல் வேளாண்மை என பல தளங்களில் செயல்பட்டு வரும் ராயலா கார்ப்பரேஷன் ஆரம்பித்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
1948-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டிணைவில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், தட்டச்சு இயந்திரம், கால்குலேட்டர் உள்ளிட்ட தயாரிப்புகளை இந்தியாவில் மேற்கொண்டு வந்தது. தற்போது இந்நிறுவனம் அறிவியல் வேளாண்மை, உணவு பதப்படுத்தல், விண்வெளி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் தன் தொழில் செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் சென்னையில் ராயலா கார்ப்பரேஷனின் வைர விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசுகையில், “இந்தியாவின் வளர்ச்சியில் ராயலா போன்ற தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளன. சர்வதேச அளவில் போட்டி போடும் வகையில் உள்நாட்டு திறமைகளை ஊக்குவிப்பது அவசியம்” என்றார்.
ராயலா கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் ரஞ்சித் பிரதாப் பேசுகையில், “காலகட்டத்தின் மாற்றத்துக்கு ஏற்ப புதிய தொழில்களையும் புதிய தொழில்நுட்பங்களையும் கைகொண்டு பயணித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ராயலா கார்ப்பரேசன் நிர்வாக இயக்குநர் ரஞ்சித் பிரதாப்பின் 50 ஆண்டுகால தொழில் பயண அனுபவத்தை பேசும் ‘சக்கரம் சுழல்கிறபோது’ என்ற நூல் வெளியிடப்பட்டது.