திருப்பூர் பின்னலாடை தொழிலில் நிலவும் பிரச்சினைகள் - பிரதமர், முதல்வருக்கு ‘டீமா’ கடிதம்

திருப்பூர் பின்னலாடை தொழிலில் நிலவும் பிரச்சினைகள் - பிரதமர், முதல்வருக்கு ‘டீமா’ கடிதம்
Updated on
1 min read

திருப்பூர்: பின்னலாடைத் தொழிலில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் (டீமா) தலைவர் எம்.பி.முத்து ரத்தினம் நேற்று அனுப்பிய கடிதம்: திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனங்கள் மூலமாக ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி, உள்நாட்டு நிறுவனங்கள் மூலமாக ரூ.30 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ.65 ஆயிரம் கோடிக்கு உற்பத்தி நடைபெறுகிறது.

இந்த தொழில், திருப்பூர் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த சுமார் 15 லட்சம் பேருக்கு வாழ்வாதாரமாக உள்ளது. திருப்பூரின் முதுகெலும்பாக உள்ள பின்னலாடைத் தொழில், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் மூடப் பட்டுள்ளன. இப்பிரச்சினை எதிர்காலத்திலும் தொடர்ந்தால், தொழிலாளர்கள் வேலையிழப்பு அதிகரிக்கும்.

திருப்பூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 90 சதவீதம் செயல்படுகின்றன. ஆடை உற்பத்தி தொழிலை சிறு, குறு நிறுவனங்கள்தான் செய்ய முடியும். இதனை மத்திய, மாநில அரசுகள்தான் ஊக்கப்படுத்த வேண்டும். பருத்தி ஏற்றுமதியை தடை செய்து, இறக்குமதி வரியை நீக்க வேண்டும். இந்திய பருத்தி பஞ்சாலை கழகம் மூலமாக பருத்தியை கொள்முதல் செய்து, நேரடியாக நூற்பாலைக்கு வழங்க வேண்டும்.

இடைத்தரகருக்கு வழங்கக்கூடாது. பருத்தியை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க வேண்டும். நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். பருத்தி ஆடையை இந்திய பாரம்பரிய ஆடையாக அரசு அறிவிக்க வேண்டும். ஏற்றுமதிக்கு உண்டான வங்கியின் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். அனைத்து நாடுகளிடமும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 90 சதவீதம் உள்ள திருப்பூருக்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சிறிய அளவிலான ஜவுளிபூங்காவை உருவாக்கி, அதற்கு மத்திய, மாநில அரசுகள் சலுகைகள் வழங்க வேண்டும். வங்க தேசத்திடம் இருந்து ஜவுளி இறக்குமதியை தடை செய்ய வேண்டும். அல்லது வரி விதிக்க வேண்டும். மாநில அரசு மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும்.

இந்திய ஜவுளி உற்பத்தியை வெளிநாட்டில் நேரடியாக சந்தைப் படுத்துவதற்கு, மத்திய அரசு சிறப்பு மானியம் வழங்க வேண்டும். நலிந்த நிறுவனங்கள் மீண்டும் தொழில் தொடங்க, மத்திய அரசு அவசர கால கடன் உதவியாக நிதி வழங்க முன்வர வேண்டும். தமிழ்நாட்டில் திருப்பூரை சிறந்த ஜவுளி மண்டலமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in