

கோவை: தமிழகம் முழுவதும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஓபன் எண்ட் மற்றும் சிறு, குறு, நடுத்தர நூற்பாலைகள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் சென்னையில் அமைச்சர்கள் தலைமையில் சிறப்பு கூட்டம் நாளை (ஜூலை 21) நடக்கிறது.
மின் கட்டண உயர்வு, கழிவுப்பஞ்சு விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழிலில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் ஓபன் எண்ட் (கழிவு பஞ்சு பயன்படுத்தும் நூற்பாலைகள்) மற்றும் குறு, சிறு, நடுத்தர நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் காந்தி தலைமையில் சிறப்பு கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சிஸ்பா), இந்திய நூற்பாலை உரிமையாளர்கள் சங்கம் (இஸ்மா), ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கம் (ஓஸ்மா),
மறு சுழற்சி ஜவுளித் தொழில் கூட்டமைப்பு (ஆர்.டி.எப்), இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு (ஐ.டி.எப்), தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா), தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் (டாஸ்மா) உள்ளிட்ட தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆர்.டி.எப் தலைவர் ஜெயபால், ஐ.டி.எப் கன்வீனர் பிரபு தாமோதரன், ஓஸ்மா தலைவர் அருள் மொழி ஆகியோர் கூறும்போது, ‘‘கடந்த ஓராண்டாக நூற்பாலை நிர்வாகத்தினர் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். வேறு வழியின்றி உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம். எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதை வரவேற்கிறோம். சிறப்பு கூட்டத்தில் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்றனர்.