Published : 19 Jul 2023 04:13 AM
Last Updated : 19 Jul 2023 04:13 AM
நாமக்கல்: போதிய ஆர்டர் இல்லாததால் குமாரபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் இயங்கும் விசைத்தறிக் கூடங்களில் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குமாரபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் ஜவுளி உற்பத்தி தொழில் பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைத் தறி மற்றும் விசைத் தறி மூலம் ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் கணிசமான எண்ணிக்கையில் விசைத் தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன.
இவற்றில் லுங்கி, கர்ச்சீப், துண்டு, வேட்டி என அனைத்துவித ஜவுளி ரகங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறாத காரணத்தினால் ஜவுளி உற்பத்தி தொடர்பான ஆர்டர்கள் குறைவது வழக்கம்.
இதன் காரணமாக குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள விசைத் தறிக் கூடங்களில் ஜவுளி உற்பத்தியை நிறுத்த அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து கொங்கு பவர்லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் கூறியதாவது: ஆடி மாதம் எந்தவொரு சுப நிகழ்ச்சியும் நடைபெறாது. இது போல் வட மாநிலங்களிலும் சுப நிகழ்வுகள் எதுவும் நடைபெறாது. எனவே இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களுக்கு ஆர்டர் கிடைக்காது. எனவே ஒரு வாரம் ஜவுளி உற்பத்தியை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் படி நேற்று முதல் ஒரு வார காலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் உற்பத்தி செய்த பல ஜவுளி ரகங்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலையும் உள்ளது. ஜவுளி வியாபாரத்திற்கு ஆண்டு முழுவதும் ஆர்டர் கிடைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
இதனிடையே ஒரு வார கால விடுமுறையால் 5 ஆயிரம் விசைத் தறிக் கூடங்களில் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என விசைத்தறி தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு வார கால விடுமுறையால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT