

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஸ்பிரிங் ஒர்க்ஸ். மனிதவளத் துறைக்கான மென்பொருள் தீர்வுகளை வழங்கி வரும் இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) கார்த்திக் மந்தவில்லே இருக்கிறார். இவர் தனது நிறுவனத்தின் இணையதளத்தில் பல்வேறு பதவிகளுக்கு ஆட்கள் தேவை என சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் நிறுவனத்துக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியிட்ட 48 மணி நேரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் சுயவிவரங்களை (ரெசியூம்) அனுப்பி உள்ளனர். இது வேலை சந்தை நிலவரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை உணர்த்துவதாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த பதிவை 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதில் சிலர் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர். அந்த வகையில் ஒரு கேள்விக்கு, “இதுவரை சுமார் 13 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன” என பதில் அளித்துள்ளார்.
மற்றொரு கேள்விக்கு, “என்னுடைய நிறுவன இணையதளத்தைத் தவிர வேறு எந்த தளத்திலும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை” என பதிவிட்டுள்ளார்.
ஸ்பிரிங் ஒர்க்ஸ் சிஇஓ கார்த்திக், அமெரிக்காவின் காமேஜி மெல்லன் பல்கலைக்கழகத்தில் மெஷின் லேர்னிங் படித்துள்ளார். இவர் 6 வயது முதலே கோடிங் கற்றுக்கொண்டதாக நிறுவன இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.