

சென்னை: தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 56.77 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அதன் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பி. ரமேஷ் பாபு கூறியுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வங்கியின் வர்த்தக வளர்ச்சி, லாபம், சொத்துகளின் தரமதிப்பு சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது. கரூர் வைஸ்யா வங்கியின் ஒட்டுமொத்த வர்த்தகம் ரூ.1,47,671 கோடியை கடந்துள்ளது. இது, எங்களது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையின் வாயிலாகவே சாத்தியமாகியுள்ளது.
முதல் காலாண்டில் வங்கி ரூ.359 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய 2022-23-ம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.229 கோடியுடன் ஒப்பிடுகையில் 56.77 சதவீதம் அதிகமாகும்.
வாராக் கடன் ஒதுக்கீட்டுக்கு முந்தைய செயல்பாட்டு லாபம் ரூ.475 கோடியிலிருந்து 36.42 சதவீதம் உயர்ந்து ரூ.648 கோடியானது.
நிகர வட்டி வருமானம் ஜூன் காலாண்டில் கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது ரூ.746 கோடியிலிருந்து 20.24 சதவீதம் அதிகரித்து ரூ.897 கோடியை எட்டியது.
ஜூன் 30 நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் 5.28 சதவீதத்திலிருந்து (ரூ.3,107 கோடி) 1.99 சதவீதமாக (ரூ.1,330 கோடி) குறைந்துள்ளது. அதேபோன்று, நிகர வாராக் கடனை பொருத்தவரையில் 1.93 சதவீதத்திலிருந்து (ரூ.1,098 கோடி) 0.59 சதவீதமாக (ரூ.390 கோடி) குறைந்துள்ளது.
கடந்த 2022 ஜூன் மாத இறுதியில் ரூ.1,29,851 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வர்த்தகம் நடப்பாண்டில் 13.72 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து ரூ.1,47,671 கோடியைத் தொட்டுள்ளது.
கடன் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளதால் நடப்பு நிதியாண்டின் எஞ்சிய காலாண்டுகளிலும் வங்கியின் வர்த்தகம் சிறப்பான வளர்ச்சியை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ரமேஷ் பாபு கூறியுள்ளார்.