Last Updated : 20 Apr, 2014 12:59 PM

 

Published : 20 Apr 2014 12:59 PM
Last Updated : 20 Apr 2014 12:59 PM

மின் பொறியாளர்களுக்கான தேவை அதிகரிப்பு: எம். உமாபதி பேட்டி

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மின்சாரத்தின் பங்கு அளப்பரியது. அனைத்துக்கும் மின்சாரம் அவசியமாகிவிட்டது. இன்றியமையாத இந்த மின் துறையில் (மின் நிறுவனத்தை அமைத்தல், பராமரிப்பு உள்ளிட்ட மேலும் சில பணிகள்) இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கொடிகட்டிப் பறப்பது வோல்டெக் நிறுவனம். இதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எம். உமாபதி தமிழகத்தைச் சேர்ந்தவர். மாதத்தில் ஓரிரு நாள்கள் மட்டுமே சென்னையில் இருக்கும் அவரை `தி இந்து’ தமிழ் நாளேட்டிற்காக பேட்டி கண்டோம். இனி அவருடனான உரையாடலிலிருந்து…

உங்கள் ஆரம்பகாலம் பற்றி…

தந்தை வேளாண் அதிகாரி. இதனால் அடிக்கடி மாற்றலாகும் தொழில். செய்யாறு, நெமிலி, உத்திரமேரூர், காஞ்சிபுரம், படப்பை என பல்வேறு ஊர்களில் பள்ளிப் படிப்பு. பின்னர் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பு. விடுதிக் கட்டணம் போன்றவற்றை செலுத்த முடியாத சூழலில், அப்போது கல்வித்துறை அதிகாரியாக இருந்த வி.சி. குழந்தைசாமியை சந்தித்து கேட்டபோது, கிண்டி பொறியியல் கல்லூரிக்கு மாற்றல் கிடைத்தது. இதனால் இரண்டு கல்லூரிகளிலும் ராகிங்கை அனுபவிக்க நேர்ந்தது. இப்போது உள்ள அளவுக்கு ஊடகங்களின் ஆதரவு இருந்திருந்தால் ராகிங் கொடுமையை அனுபவித்திருக்க வேண்டியிருக்காது.

1982-ல் படித்து முடித்த பிறகு பெஸ்ட் அண்ட் கிராம்ப்டன் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. 6 ஆண்டுகள் பணியாற்றியபிறகு தனியாக தொழில் தொடங்கலாம் என்ற எண்ணம் தோன்றியதில் 1989-ல் உருவானதுதான் வோல்டெக் இன்ஜினீயரிங் லிமிடெட்.

ஆனால் 1995-ம் ஆண்டிலிருந்துதான் வோல்டெக் செயல்படத் தொடங்கியது. இடைப்பட்ட 6 ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

நிறுவனத்தை பதிவு செய்ததோடு சரி. பிறகு பொறியியல் படிப்பு படித்த நண்பர்கள் சிலர் உருவாக்கிய எல்சிடெக் இன்ஜினீயரிங் லிமிடெட் நிறுவனத்தில் 6 ஆண்டுகள் இயக்குநராக பணியாற்றினேன். வழக்கம்போல கருத்து வேறுபாடு தோன்றவே தனியாக நிறுவனத்தை நடத்தலாம் என்று வெளியேறி வந்தேன்.

ஏற்கெனவே பதிவு செய்திருந்ததால் 4 பொறியியலாளர்களுடன் வோல்டெக் நிறுவனம் தியாகராய நகரில் உள்ள ஒரு கார் ஷெட்டில் உதயமானது.

உங்களின் வளர்ச்சிக்கு அடிப்படை காரணம் என்ன?

நிறுவன வளர்ச்சியில் முழு மூச்சாக பாடுபடுபவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுத்தேன். 2004-ம் ஆண்டு பிரைவேட் லிமிடெட்டாக மாற்றியபோது, நிறுவனத்தின் மூத்த பொறியாளர் ராஜேந்திர பிரசாத் என்பவரை அதன் இயக்குநராக நியமித்து அவரிடம் பொறுப்புகளை அளித்தேன். மேலும், நிறுவனத்தில் பணி புரிபவர்கள் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்ந்து அளிக்கப்படுகிறது. பொதுவாக 100 பேர் தேவை என்றால் அதில் 30 சதவீதம் பணியாளர்களின் பரிந்துரைக்கு ஒதுக்கப்படும். இதனால் நிறுவனம், ஊழியர்களிடையிலான பந்தம் வலுவாக உள்ளது.

வெறுமனே மின்னுற்பத்தி நிலையங்களில் மட்டும்தான் உங்களது பணி இருக்குமா?

அப்படி கூற முடியாது. எங்கெல்லாம் மின்சாரம் செல்கிறதோ அந்த நிறுவனங்களில் எங்களுக்கு வேலை இருக்கும். சிமென்ட், எண்ணெய் மற்றும் எரிவாயு, திரவ எரிவாயு முனையம் உள்ளிட்டவற்றில் மின் மாற்றி பராமரிப்புப் பணிகள் இருந்துகொண்டே இருக்கும்.

சில நிறுவனங்களுக்கு மின் உபகரணங்களை பரிசோதித்து அளிக்கும்போது அதை பராமரிக்கும் வேலையையும் எங்களையே மேற்கொள்ளச் சொல்வர். இதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போனதால் வோல்டெக் ஆபரேடிங் சர்வீசஸ் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது..

தமிழகத்தில் 20 மின் நிலையங்களை பராமரித்து வருகிறோம். இது தவிர அணு மின் நிலைய பராமரிப்பையும் வோல்டெக் மேற்கொண்டுள்ளது.

ஒரு நிறுவனம் தொடங்கி அடுத்தடுத்து அது தொடர்புடைய நிறுவனங்களைத் தொடங்கி அதை லாபகரமாக செயல்படுத்த முடிந்தது எப்படி?

அனைத்துக்கும் மூலாதாரமானது மின்சாரம் சார்ந்த துறைதான். மின் பொறியாளர்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பொறியாளர்களைத் தேர்வு செய்து பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் அளிக்கிறோம். பிற நிறுவனங்கள் தங்களுக்கு பயிற்சி பெற்ற பணியாளர்களைக் கேட்கத் தொடங்கியதால் வோல்டெக் ஹெச்ஆர் நிறுவனம் என்ற ஒன்றையும் சமீபத்தில் தொடங்கினோம்.

இது தவிர சூரிய ஆற்றல் மின்சாரம் இப்போது மிகவும் பிரபலமாகிவருகிறது. இதைக் கருத்தில் கொண்டு சோலார் பேனல் தயாரிப்புக்கு அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து வோல்டெக் சோலார் பிவி லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம். இது தவிர 10 மெகாவாட் சூரிய மின்னாற்றல் உற்பத்தி நிலையம் கோவூரில் தொடங்கப்பட உள்ளது. விரைவிலேயே இது மின்னுற்பத்தியைத் தொடங்கும்.

வெளிநாடுகளில் இத்தகைய பணிகளை எவ்விதம் மேற்கொள்கிறீர்கள்?

ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளில் எங்களுக்கு அலுவலகங்கள் இருக்கிறது. இதனால் சவுதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பணிகளை மேற்கொள்கிறோம். இப்போது தென்னாப்பிரிக்க நாடுகளில் கென்யா, அல்ஜீரியா, நைஜீரியா, தான்சானியா, உகாண்டா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் கவனம் செலுத்தி வருகிறோம்.

மின்சாரம் சார்ந்த பொறியியல் படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது?

தகவல் தொழில்நுட்பத் துறையில் சேர்ந்தவுடன் கிடைக்கும் அளவுக்கு சம்பளம் இத்துறையில் கிடைக்காது. படித்து முடித்துவரும் இளைஞர்களுக்கு பயிற்சி மிகவும் அவசியம். இதற்காக 3 மாத பயிற்சி அளிக்கிறோம். இத்தகைய பயிற்சியை முடித்தவர்களுக்கு நாங்களே வேலை வாய்ப்பைத் தருகிறோம். ஆரம்பத்தில் ஐ.டி. துறை போன்று அதிக சம்பளம் இருக்காது என்றாலும், 3 ஆண்டு அனுபவம் பெற்றவர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளை முடித்தவர்களுக்காக நடத்தப்படும் கேம்பஸ் போல இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் நடத்துவதில்லையே ஏன்?

தேவை அதிகமாக இருந்தாலும், மின்சாரம் சார்ந்த பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கென்று தனியாக கேம்பஸ் நடத்துவதில்லை. கோர் சப்ஜெக்ட் படித்த இளைஞர்கள், இதுதான் தங்கள் தேர்வு என கருதி தேர்ந்தெடுத்து வரும்பட்சத்தில் அவர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி தருகிறோம்.

ஐ.டி. நிறுவனங்கள் பயிற்சி கொடுத்த பிறகுதானே பொறியியல் பட்டதாரிகளை பயன்படுத்திக் கொள்கின்றன? அதே பாணியை மின்துறை நிறுவனங்கள் பின்பற்றாதது ஏன்?

காரணம் இதில் நிலவும் ஆள் பற்றாக்குறைதான். பயிற்சி பெற்ற பிறகு அதிக சம்பளத்துக்கு அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பார்கள்.

இதனாலேயே பயிற்சி பெற்றவர்களைத் தக்க வைத்துக் கொள்வது மிகப் பெரும் சவாலாக உள்ளது.

ramesh.m@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x