Published : 20 Nov 2017 09:07 AM
Last Updated : 20 Nov 2017 09:07 AM

ஜிஎஸ்டி வரியும் ஓட்டல் பில்லும்

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் என்பது இருக்கும்தானே என்று சகஜமாக எடுத்துக்கொள்வதைப் போல வியாபாரம் என்று இருந்தால் வரி எய்ப்பு இருக்கத்தானே செய்யும் என்பதையும் சகஜமாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டோம். அரசாங்கத்தின் ஊழல் மக்களின் வரிப்பணத்தில்தான் நடக்கிறது என்றாலும் மக்கள் நேரடியாகப் பாதிக்கப் படுவதில்லை. அதாவது அவனது பாக்கெட்டில் இருந்துதான் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டாலும் அவனது சட்டையோ பர்ஸோ நேரடியாகக் கிழிபடாததால் அவன் அது குறித்து மெத்தனமாக இருக்கிறான். ஆனால் வியாபாரம் அப்படியல்ல. அதிலும் குறிப்பாக ஓட்டல் தொழில் அப்படியல்ல. சாதாரண மனிதனை அன்றாடம் நேரடியாக பாதிக்கிறது.

இல்லையென்றால் ஜிஎஸ்டி ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது என்றவுடனேயே, அது அமலுக்கு வரும் முன்பாகவே விலையை ஏற்றி இருப்பார்களா?. சரி விலையைத்தான் ஏற்றினார்களே, ஜூலை 1 முதல் ஏற்றிய விலைக்கு உள்ளாகவாவது அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியை வைத்துக் கொண்டார்களா. ஏற்றிய விலைக்கு மேல் ஜிஎஸ்டி எக்ஸ்ட்ரா.

ஆனால் இதே ஒட்டல் முதலாளிகள் அரசிடம் முறையிட்டது என்ன? எங்களுக்கு ஜிஎஸ்டி கொள்முதல் பொருட்களில் இருக்கும் ஜிஎஸ்டியை வரவு வைத்துக்கொண்டு, அதிலிருந்தே செலுத்த வேண்டிய வரியை கழித்துக் கொள்ளும் வசதி வேண்டவே வேண்டாம். ஏனென்றால், நாங்கள் கொள்முதல் செய்யும் பொருட்களும் நபர்களும் ஒழுங்குபடுத்தப்படாத வியாபாரிகள். அவர்கள் ஜிஎஸ்டி-க்கு உள்ளேயே வராதவர்கள். எனவே ITC என்கிற உள்ளீட்டு வரி வரவால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே அதை நீக்கிவிட்டு வரியைக் குறையுங்கள் என்றார்கள்.

சரி இவர்கள் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து அரசாங்கமும் வரியைக் குறைத்துவிட்டது. ஆனால் விலையைக் குறைப்பதற்கு பதில், ஜிஎஸ்டியோடு இருந்த பழைய விலையையே தக்கவைத்துக் கொள்ள, தங்கள் பொருட்களின் அடக்க விலையைக் கூட்டிவிட்டார்கள்.

ஜிஎஸ்டி அறிவிக்கும் முன்னரே விலையைக் கூட்டிவிடுவார்கள். கூட்டிய விலைக்கு மேல் ஜிஎஸ்டி வசூலிப்பார்கள். அரசங்கம் ஜிஎஸ்டியைக் குறைத்தால் அப்போதும் பொருள் விலையை ஏற்றிக்கொள்வார்கள். நேற்றுவரை இந்த விலை கொடுத்துதானே சாப்பிட்டான். அதே விலை அவனுக்கு எப்படி கஷ்டமாகத்தோன்றும். இப்போது கேட்டால் எங்களுக்குக் கிடைத்துக்கொண்டிருந்த உள்ளீட்டு வரி வரவு சலுகையை அரசாங்கம் விலக்கிக் கொண்டு விட்டதால், விலையை ஏற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று கையை விரிக்கிறார்கள்.

ஜிஎஸ்டியின் அறிமுகத்தால் எல்லாப் பொருட்களின் விலைகளும் ஏறும் என்பது உண்மை என்றால் கார்களின் விலை மட்டும் எப்படிக் குறைந்தது. ஏனென்றால் அவை தொழிற்சாலைகளில் தயாராகிக்கொண்டு இருப்பவை. அந்த உற்பத்தித் தொழில் கணக்கு வழக்கு மத்திய அரசின் கண்காணிப்பு மற்றும் வருடாந்திர தணிக்கைக்கு உட்பட்டது. எனவே உள்ளீட்டு வரி வரவு மூலமாகக் கிடைக்கிற கூடுதல் நன்மையை வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்தார்கள்.

ஒட்டல் தொழிலில் என்ன கணக்கு, என்ன தணிக்கை என்பதை என்னைப்போல உங்களைப்போல பாதிக்கப்படும் ஒவ்வொரு நுகர்வோரும் அறிவார்கள். நம்மால் முடிந்ததெல்லாம், காய்ச்சிய எண்ணெய்யிலேயே திரும்பத்திரும்ப புதிய எண்ணெய்யை ஊற்றிக் காய்ச்சி உடம்பை விஷமாக்கும் ஒட்டல்களுக்குச் செல்வதையே முற்றிலுமாகத் தவிர்ப்பதுதான். காந்தி சொன்ன பகிஷ்காரம் என்ற வார்த்தையை பின்பற்ற வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x