Published : 18 Jul 2014 10:00 AM
Last Updated : 18 Jul 2014 10:00 AM

ஊழியர்களை ஊக்கமூட்டும் உத்திகள்

அலுவலகத்தில், உங்கள் கீழ் ஒருவர் வேலை பார்க்கிறார். மகா திறமைசாலி. ஒரு வேலையை நீங்கள் சொல்லும் வழியில் செய்யவே மாட்டார். ஆனால், அதைக் குறிப்பிட்ட நேரத்துக்குள், தன் வழியில் முடித்துவிடுவார். இவரை எப்படி டீல் செய்யலாம்?

ஏராளமான அலுவலகங்களில், நீங்களும் நானும் அன்றாடம் சந்திக்கும் அனுபவம் இது. ஆபீஸில் மட்டுமா, வீட்டிலும், நம் பேச்சைக் கேட்கவேண்டிய தம்பி, தங்கைகள், குழந்தைகளும் இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள்.

இந்த மாற்றம் கடந்த பத்து ஆண்டுகளில்தான் வந்தது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.

1. பிஸினஸ் உலகில் எம்.பி.ஏ.க்கள் வருகை

2. சாஃப்ட்வேர் துறையின் வளர்ச்சி

பிஸினஸ் உலகில் எம்.பி.ஏ.க்கள் வருகை

இந்தியாவில் மேனெஜ்மென்ட் படிப்புக்கு 1948 – இல் முதற்புள்ளி வைத்தவர்கள் புது தில்லியில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் (Indian Institute of Social Sciences) என்னும் கல்வி நிலையம். ஆனால், 1961 – இல் அகமதாபாத், கொல்கத்தா ஆகிய இரண்டு இடங்களிலும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (ஐ.ஐ.எம்) வந்தபிறகுதான், எம்.பி.ஏ. படித்தவர்களுக்கு கார்ப்பரேட் உலகில் அங்கீகாரம் கிடைத்தது. ஏராளமான இளைஞர்கள், இளைஞிகள் பிரபல கம்பெனிகளில் அதிகாரிகளாகப் பதவிகள் பெற்றார்கள்.

சாஃப்ட்வேர் துறையின் வளர்ச்சி

2000 – ம் ஆண்டு முதல், இந்தியா சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் வல்லரசாகத் தொடங்கியது.வேலை வாய்ப்புகள் வளர்ந்தன. கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள, ஏற்கெனவே வேலைகளில் இருந்தவர்கள் தயங்கினார்கள். இளைஞர், இளைஞிகள் விரைவாகக் கற்றுக்கொண்டார்கள், தேர்ச்சி பெற்றார்கள்; கை நிறையச் சம்பளம் வாங்கினார்கள்.

சமுதாயப் பாதிப்புகள்

இளைய சமுதாயத்தின் பொருளாதாரச் சுதந்திரம் எதிர்பாராத சமுதாய, பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்தியது. கூட்டுக் குடும்பச் சித்தாந்தம் உடையத் தொடங்கியது. தனிக் குடித்தனம் போனார்கள். உறவுகளைவிட, பண, வசதித் தேடல்கள் மக்களுக்கு முக்கியமாயின. வயதில் மூத்தவர்கள், சமூகப் பொருளாதார நிலைகளில் கீழ் நிலைகளில் இருந்தாலும், அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் தருவது நம் பண்பாடு. இந்தப் பழக்கம் அடிவாங்கியது.

அலுவலகப் பாதிப்புகள்

சமுதாய மாற்றங்கள் அலுவலக மேனேஜ்மென்ட் ஸ்டைல்களைப் பாதித்தன. பெரும்பாலும், உயர் அதிகாரிகள் வயதில் மூத்தவர்களாக இருந்தார்கள். இவர்கள் கட்டளை போடுவார்கள். வயதில் மூத்தவர்களுக்கு மதிப்பு கொடுக்கும் சமுதாயப் பழக்க வழக்கங்களாலும், ஊழியர்களின் வேலைத் தேவைகளாலும், பணியாளர்கள் கேள்வி கேட்காமல் அவர் ஆணைகளை அப்படியே நிறைவேற்றினார்கள்.

புதிய தலைமுறையினர் ”ஆமாம் சாமி” போட மறுத்தார்கள். மேல் அதிகாரிகளின் கருத்துகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் தவறு என்று நினைத்தால், அவற்றை வெளிப்படையாக அவர்களிடமே சொன்னார்கள்.

சாஃப்ட்வேர் கொண்டுவந்த இன்னொரு முக்கிய மாற்றம், டீம் ஒர்க். டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசன்ட், இன்ஃபோஸிஸ் போன்ற சாஃப்ட்வேர் கம்பெனி ஊழியர்களோடு பேசிப் பாருங்கள். என் வேலை, என் கம்பெனி என்று சொல்லமாட்டார்கள்: எங்கள் வேலை, எங்கள் கம்பெனி என்றுதான் சொல்வார்கள். கூட்டணியாக வேலை செய்வதால், நிறுவனச் செயல்பாடுகளில் கணிசமான முன்னேற்றம் வருகிறது.

1998 – ம் ஆண்டில், அமெரிக்கப் பயிற்சி மற்றும் முன்னேற்றக் கழகம் (American Society of Training and Development) 230 அமெரிக்கக் கம்பெனிகளிடையே ஆய்வு நடத்தினார்கள். இதன்படி, கூட்டணியாகச் செயல்பட்டால்,

# தனிமனித உற்பத்தித் திறன் 67 சதவிகிதம் அதிகரிக்கிறது.

# தரம் 72 சதவிகிதம் உயர்கிறது.

# சேதாரம் 55 சதவிகிதம் குறைகிறது.

# ஊழியர்களின் திருப்தி 65 சதவிகிதம் கூடுகிறது.

# வாடிக்கையாளர் திருப்தி 55 சதவிகிதம் அதிகரிக்கிறது.

இதனால், எல்லா நிறுவனங்களும் சாஃப்ட்வேர் பாணியைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். எல்லா நிறுவனங்களிலும் மனிதர்கள் தனிப்பட்டவர்களாக, தீவுகளாக வேலை பார்த்த காலம் மலையேறிவிட்டது. குழுக்களாக, அணிகளாக வேலை செய்கிறார்கள்; இளைஞர்கள் முன் நிறுத்தப்படுகிறார்கள்.

இளைஞர், இளைஞிகளின் ராக்கெட் வேக வளர்ச்சியும், புதிய நிர்வாக முறைகளும், மூத்தவர்கள் மனதில் சுனாமியை ஏற்படுத்தி வருகின்றன. 30, 40 வருடங்கள் வேலை பார்த்துத் தங்களுக்குக் கிடைத்த சம்பளமும், பதவிகளும் இருபதுகளிலேயே இவர்களுக்குக் கிடைக்கிறதே என்று பொருமுகிறார்கள். அவர்கள் கேள்விகள் கேட்டால், குமுறுகிறார்கள்.

முதியவர்களின் ஆதங்கங்களைப் புரிந்துகொள்ளும் மனப் பக்குவம் இளைய சமுதாயத்திடம் இல்லை. அதனால், இளைய அதிகாரிகளுக்கும், அவர்கள் கீழ் பணியாற்றும் முதியவர்களுக்குமிடையே உரசல் வருகிறது. இரு தரப்பிலும் மன அழுத்தங்கள்.

இதற்கு ஒரே தீர்வு பேச்சு வார்த்தைகள்தாம். இதோ ஒரு அனுபவம்: பாண்டிச்சேரியில் எம்.பி.ஏ படித்து முடித்த பிரபு வயது 24. முதல் வேலைக்குச் சேர்ந்தார். அவர் கீழே 25 பேர். பலர் ஐம்பது வயதைத் தாண்டியவர்கள்.

பிரபுவின் ஜெனரல் மேனேஜர் சாண்டில்யா அப்போது அறிவுரை சொன்னார் - – ஊழியர்களை மேனேஜ் செய்வது, பாலன்ஸ் செய்யும் சர்க்கஸ் ட்ரப்பீஸ் விளையாட்டு மாதிரி. நட்பாகப் பழகவேண்டும், தேவைப்படும்போது கண்டிக்கவும் வேண்டும்.

சாண்டில்யா காட்டிய வழி பிரபுவுக்கு 24 பேரிடம் ஒர்க் அவுட் ஆனது. 52 வயது சிவராம் பாராட்டுக்கும் மசியவில்லை, கண்டிப்புக்கும் பணியவில்லை. சிவராமை எப்படி டீல் பண்ணவேண்டும்? பிரபு சிந்தித்தார். முதல் நடவடிக்கையாக சிவராம் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்று கண்டுபிடிக்கவேண்டும். அவர் பற்றிய விவரங்களை எச்.ஆர். டிபார்ட்மென்டில் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

சிவராம் 30 வருடங்களாக கம்பெனியில் பணி புரிகிறார். புத்திசாலி, கடும் உழைப்பாளி. ஒரே குறை, தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்னும் முரட்டுப் பிடிவாதம். பிறரோடு பழகும் முறை தெரியாததால், கடந்த பத்து ஆண்டுகளாக அவருக்குக் கம்பெனி பதவி உயர்வே தரவில்லை.

ஒரு நாள். பிரபு சிவராமை கான்ஃபரன்ஸ் அறைக்கு அழைத்தார்.

“மிஸ்டர் சிவராம், எனக்கு உங்கள் உதவி தேவை.”

“என்ன சார் விளையாடறீங்க? நீங்க ஆபீசர். நான் சாதா ஆள்.”

“மிஸ்டர் சிவராம், நான் கம்பெனிக்குப் புதுசு. நீங்க அனுபவசாலி.”

“சார், நான் வெளிப்படையாப் பேசுறவன். நேரடியாக் கேட்கிறேன். மூணு, நாலு வருஷத்துக்குப் புது மேனேஜர் வர்றாங்க. நானும் என் உழைப்பைக் கொட்றேன். அவங்க மேல் பதவிக்குப் போறாங்க. ஏணி மாதிரி, அவங்க மேலே போக உதவி பண்ணிட்டு நான் அப்படியே நிக்கிறேன்.”

“ஒண்ணு புரிஞ்சுக்கங்க மிஸ்டர் சிவராம், என் அப்ரோச் வித்தியாசமானது. நீங்க வளரணும், அப்போதுதான் நான் வளரமுடியும்.”

“இந்த மாதிரிப் பேச்சு நான் ஆயிரம் தடவை கேட்டாச்சு.”

“இது வெறும் பேச்சில்லை. நம்ம டிபார்ட்மென்டில் எப்படியெல்லாம் முன்னேற்றம் செய்யலாம் என்று முடிவெடுக்க ஒரு கமிட்டி போடறோம். அதுக்கு நீங்கதான் தலைவர். உங்க கீழே நாலு பேர் ஒர்க் பண்ணுவாங்க.”

“இது வெறும் பாவ்லா. உங்க ஐடியாக்களை நிறைவேற்ற ஒரு கமிட்டி. அதற்கு நான் தலைவர்.....”

“இல்லே, நிச்சயமா இல்லே. உங்க கமிட்டிதான் ஐடியா தரும். நான் தலையிடவே மாட்டேன். மூணு மாசத்தில் ரிப்போர்ட் குடுங்க. நீங்க, நான், சாண்டில்யா சார் மூணு பேரும் சேர்ந்து பேசுவோம். எந்த ஐடியாக்களைச் செயல்படுத்தலாம் என்று மூணு பேருமாக முடிவெடுப்போம்.”

“தாங்க் யூ சார். ரெண்டே நாளில் கமிட்டி போட்டுடறேன். தேவைப்படும்போது, உங்க உதவிய வாங்கிக்கிறேன்.”

கமிட்டியை வழி நடத்தும் அனுபவம், சிவராமின் தலைமைக் குணங்களை வளர்க்கும். இந்த சோதனையில் அவர் ஜெயித்துவிட்டால், அதிகப் பொறுப்புகள், பதவி உயர்வுகள் தரலாம். பிரபு மனம் நிறைய நம்பிக்கை.

நம்பிக்கைதானே வாழ்க்கை!

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x