

மும்பை: சுமார் 1,850 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கிளாசிக் எஸ்யூவி ரக வாகனத்தை இந்திய ராணுவம் ஆர்டர் செய்துள்ளதாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஜனவரியில் 1,470 ஸ்கார்ப்பியோ கிளாசிக் எஸ்யூவி-யை ராணுவம் ஆர்டர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த எஸ்யூவி வாகனங்கள் இந்திய ராணுவத்தின் 12 யூனிட்களின் பயன்பாட்டிற்காக வாங்கப்படுகிறது. ஸ்கார்ப்பியோவின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் தான் ஸ்கார்ப்பியோ கிளாசிக். ஸ்கார்ப்பியோ-என் எனும் மாடலையும் மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது.
இந்திய ராணுவம் டாடா சஃபாரி, டாடா செனான், ஃபோர்ஸ் கூர்க்கா, மாருதி சுசுகி ஜிப்ஸி போன்ற வாகனங்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்கார்ப்பியோ கிளாசிக் வாகனமும் இணைகிறது. கடந்த ஜூனில் மஹிந்திரா டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் (எம்டிஎஸ்) இந்திய பாதுகாப்பு படைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கியுள்ள ஆர்மர்டு லைட் ஸ்பெஷலிஸ்ட் வாகனமான (ஏ.எல்.எஸ்.வி) “ஆர்மடோ” கவச வாகனம் டெலிவரி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
ஸ்கார்ப்பியோ கிளாசிக்: ராணுவ பயன்பாட்டுக்காக வழங்கப்பட உள்ள வாகனங்கள் 4x4 பவர்ட்ரைன் மற்றும் 2.2 லிட்டர் என்ஜினை கொண்டிருக்கும் என தெரிகிறது. இது தற்போது பொது பயன்பாட்டுக்கு கிடைத்து வரும் வெர்ஷனில் இருந்து மாறுபட்ட வெர்ஷனாக தயாரிக்கப்படுகிறது. ஏனெனில் தற்போது பயன்பாட்டில் உள்ள ஸ்கார்ப்பியோ கிளாசிக்கில் 4x4 பவர்ட்ரைன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்ஜினின் எடை அளவு மற்றும் சஸ்பென்ஷன் போன்றவையும் இதில் மாறுபடும் என தெரிகிறது.