

மதுரை: ஜிஎஸ்டி அமைப்பை அமலாக்கத் துறை நிர்வகிக்கும் பணப் பரிமாற்றம் தடைச் சட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் சேர்த்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதற்கு வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் எஸ்.ரத்தினவேலு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமுலாக்கத் துறை நிர்வகிக்கும் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் ஜிஎஸ்டி நெட்வொர்க்கை சேர்த்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம் கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இது வணிகர்களிடையே, குறிப்பாக நேர்மையாக வரி செலுத்தும் வணிகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வரி ஏய்ப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கமில்லாமல், சாதாரணமாக நடக்கும் தவறுகளுக்கும் கூட கடுமையான அபராதங்கள் விதிக்க சரக்கு வாகனங்களை சோதனையிடும் ‘ரோவிங் ஸ்குவாட்’ அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் தவறு செய்யாத வணிகர்களும் மிரட்டப்படுவதாக புகார்கள் வருகின்றன. லஞ்சத்தின் ஊற்றுக்கண்ணாக இந்த நடைமுறை உள்ளது. இந்நிலையில் வணிக நடைமுறை யதார்த்தங்களை புரிந்து கொள்ளாமல் ஜிஎஸ்டி விதிகள் மாற்றப்படுகின்றன. ஜிஎஸ்டி வரி அமல்படுத்துவதில் ஏற்கெனவே இருக்கும் குழப்பங்களோடு, அமலாக்கத் துறையும் தலையிட அனுமதி அளித்திருப்பது தவறானது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.