கடற்படைக்கு 26 ரஃபேல் விமானங்கள், 3 நீர்மூழ்கி கப்பல்கள் வாங்க ஒப்பந்தம்: பிரதமரின் பிரான்ஸ் பயணத்தில் கையெழுத்தாகிறது

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் 13, 14 ஆகிய தேதிகளில் பிரான்ஸ் நாட்டில் 2 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். 14-ம் தேதி பாரிஸ் நகரில் நடைபெற உள்ள பிரான்ஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்தியா – பிரான்ஸ் இடையேயான உறவின் 25-ம் ஆண்டை முன்னிட்டு, தேசிய தின அணிவகுப்பில் அந்நாட்டு படையினருடன் இந்தியப் படையினரும் இணைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தில் காலநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்க இழப்பு, நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதிப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் இப்பயணத்தில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலுக்காக 26 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யவும் பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் மும்பை மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் மேலும் 3 நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கவும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.

இதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் வரும் 13-ம் தேதி நடைபெறும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது.

பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் மும்பை மசகான் கப்பல் கட்டும் தளத்தில் 6 கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பல் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதில் 6-வது கல்வாரி நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் வஷீர் தற்போது பரிசோதனையில் உள்ளது. இது, அடுத்த ஆண்டு கடற்படையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் மேலும் 3 நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in