விலை வீழ்ச்சியால் பறிக்காமல் விடப்பட்ட எலுமிச்சை: திண்டுக்கல் விவசாயிகள் கவலை

விலை வீழ்ச்சியால் பறிக்காமல் விடப்பட்ட எலுமிச்சை: திண்டுக்கல் விவசாயிகள் கவலை
Updated on
1 min read

வத்தலக்குண்டு: விலை வீழ்ச்சி அடைந்ததால், எலுமிச்சையை பறிக்காமல் மரங்களில் விட்டுள்ளதால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை, வத்தலகுண்டு சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் அய்யம்பாளையம், தாண்டிக்குடி மலை அடிவாரப் பகுதிகளில் எலுமிச்சை அதிகம் விளைவிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காரணமாக எலுமிச்சை விலை அதிகரித்து விற்பனையானது. அதிகபட்சமாக ஒரு எலுமிச்சம்பழம் ரூ.6 முதல் ரூ.10 வரை விற்பனையானது.

தற்போது கோடை சீசன் முடிவடைந்த நிலையில் எலுமிச்சையின் தேவை வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் இந்த மாதத் தொடக்கம் முதலே எலுமிச்சை விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. மொத்த மார்க்கெட்டில் ஆயிரம் பழங்கள் கொண்ட ஒரு மூட்டை ரூ.800 முதல் ரூ. 1000 வரை விற்பனையாகிறது. இதனால் ஒரு எலுமிச்சை விலை மொத்த மார்க்கெட்டில் ஒரு ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்டில் ரூ.2-க்கும் விற்பனையாகிறது.

எலுமிச்சையைப் பறித்து அதை மார்க்கெட்டுக்கு கொண்டு வருவதற்குள் பறிப்புக் கூலி, போக்குவரத்து செலவு ஆகியற்றை கணக்கிட்டால் வரவைவிட செலவு அதிகமாக இருப்பதால் எலுமிச்சையைப் பறிக்காமல் மரங்களிலேயே விவசாயிகள் விட்டு விட்டனர். இதனால் தோட்டங்களில் எலுமிச்சை பழங்கள் மரத்திலேயே காய்ந்து, பழுத்து கீழே விழுகின்றன.

இது குறித்து விவசாயி சரவணன் கூறுகையில், கடந்த மாதம் வரை வருவாயைக் கொடுத்த எலுமிச்சை தற்போது பெரும் இழப்பைக் கொடுக்கிறது. ஆடி மாதத்தில் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் விலை உயர வாய்ப்புள்ளது, என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in