

புதுடெல்லி: லாயிட்ஸ் பேங்கிங் குழுமம், பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிதி நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், அந்நிறுவனத்துக்கான தொழில்நுட்ப மையத்தை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில் அந்த தொழில்நுட்ப மையத்துக்கான (ஐ.டி.) தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக சிரிஷா வோருகாந்தியை லாயிட்ஸ் குழுமம் அறிவித்துள்ளது.
சிரிஷா வோருகாந்தி தகவல் தொழில்நுட்பம், தரவு பொறியியல் மற்றும் ஃபின்டெக் உள்ளிட்ட துறைகளில் முப்பது ஆண்டுகால அனுபம் கொண்டவர். ஜேபி மோர்கன், மாஸ்டர்கார்ட், ஜேசி பென்னி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் அவர் முக்கியப் பொறுப்பு வகித்துள்ளார்.
2 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் லாயிட்ஸ் பேங்கிங் குழுமம் அதன் டிஜிட்டல் கட்டமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில் இதற்கான தொழில்நுட்ப மையத்தை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைக்க முடிவு செய்துஉள்ளது.
இவ்வாண்டு இறுதியில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தொழில்நுட்ப மையத்தில், முதற்கட்டமாக ஐடி தொழில்நுட்பம், தரவு மற்றும் சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட பிரிவுகளில் நிபுணத்துவம் கொண்ட 600 நிபுணர்களை பணியமர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.