Published : 06 Jul 2023 09:23 AM
Last Updated : 06 Jul 2023 09:23 AM

தமிழகத்தில் ஓபன் எண்ட் நூற்பாலைகள் போராட்டம் எதிரொலி - 40,000 பேர் வேலை இழப்பு

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் உற்பத்தி நிறுத்த போராட்டத்தால் வெறிச் சோடிய ஓபன் எண்ட் நூற்பாலை.

கோவை / திருப்பூர்: மின்கட்டணம் மற்றும் கழிவுப் பஞ்சு விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் தமிழகம் முழுவதும் நேற்று முதல் 230 கிரே நூல் தயாரிக்கும் ஓபன் எண்ட் நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன.

நேற்று ஒரே நாளில் ரூ.1.43 கோடி மதிப்பிலான நூல் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டன. கழிவு பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் பணி ஓபன் எண்ட் (ஓஇ) நூற்பாலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் 600 ஓஇ நூற்பாலைகள் செயல்படுகின்றன. இவற்றில் 300 நூற்பாலைகள் கலர் நூல் தயாரிப்பிலும், 300 நூற்பாலைகள் கிரே நூல் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன.

மின்கட்டணம் மற்றும் கழிவுப்பஞ்சு விலை உயர்வால் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் நேற்று முதல் 230 கிரே நூல் தயாரிப்பு நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறியதாவது: முதல் நாளில் கோவை, திருப்பூர், ராஜாபாளையம், அவிநாசி, அன்னூர் பகுதிகளில் உள்ள 230 கிரே நூல் உற்பத்தி செய்யும் ஓஇ நூற்பாலைகள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன. நேற்று ஒரே நாளில் ரூ.1.43 கோடி மதிப்பிலான நூல் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஓபன் எண்ட் நூற்பாலைகளில் உற்பத்தி செய்யப்படும் நூலை கொண்டு காடா துணி, பெண்களுக்கான பெட்டிகோட் உள்ளிட்ட ஜவுளிப் பொருட்கள் மற்றும் திரைச்சீலை, டர்கி டவல் உள்ளிட்ட அனைத்து வகையான வீட்டு உபயோக ஜவுளிப்பொருட்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. ஓபன் எண்ட் நூற்பாலைகள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்படும் தன்மை கொண்டவை.

இதுவரை குறு, சிறு பிரிவை சேர்ந்த நூற்பாலைகளுக்கு உச்சபட்ச நேர மின்கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில் சமீப காலமாக புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. டிமாண்ட் கட்டணம் குறு, சிறு நூற்பாலைகள் மாதந்தோறும் ரூ.3,920 மட்டும் செலுத்தி வந்த நிலையில் தற்போது மின் கட்டணம் நான்கு மடங்கு அதிகரித்து நூற்பாலை இயங்கினாலும், இயங்காவிட்டாலும் மாதந்தோறும் ரூ.17,200 செலுத்த வேண்டியுள்ளது.

தமிழகத்தில் கிரே, கலர் நூல் தயாரிக்கும் 600 ஓ.இ நூற்பாலைகள் உள்ள நிலையில் நான்கு நாட்களில் மேலும் நூற்றுக்கணக்கான நூற்பாலைகள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. கழிவுப் பஞ்சு விலையைப் பொறுத்தவரை கடந்த 2022-ம் ஆண்டு வரை பஞ்சு விலையில் 40 முதல் 50 சதவீதம் மட்டுமே உயர்வு இருந்து வந்த நிலையில் தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த இரண்டு பிரச்சினை களுக்கும் தீர்வு காணப்படாத வரை ஓபன் எண்ட் நூற்பாலைகள் மீண்டும் செயல்பட சாத்தியமில்லை. நேற்று ஒரே நாளில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் போராட்டத்தில் பங்கேற்கும் நூற்பாலைகள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலில் வேலை வாய்ப்பு பெற்றுள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் சோமனூர், திருப்பூர் மாவட்டம் மங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள ஓ.இ.மில் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், மங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: கடும் நெருக்கடியை சந்தித்து வருவதால், தமிழகம் முழுவதும் உள்ள ஓ.இ. மில்களில் நேற்று முதல் முழு உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்பாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பஞ்சில் இருந்து, நூல் உற்பத்தி செய்யும் ஓ. இ. மில்கள் திருப்பூர், கரூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் இயங்கி வருகின்றன.

இந்த மில்களில் தினமும் 1400 டன் அளவுக்கு கலர் மற்றும் கிரே நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. கிரே நூல்களை பயன்படுத்தி விசைத் தறிகளில் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது, கலர் நூல், பெட்ஷீட், லுங்கி, துண்டு, மெத்தை விரிப்பு உள்ளிட்ட ரகங்கள் தயாரிக்க பயன்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தால் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 50 ஆயிரம் கிலோ உற்பத்தி பாதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x