

புதுடெல்லி: பொதுத் துறை வங்கிகளின் லாபம் கடந்த 9 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்ந்துள்ளது என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் அவர் நேற்று கூறியதாவது:
காங்கிரஸ் காலத்தில் தகுதியற்ற நபர்களுக்கு கடன் வாரி வழங்கப்பட்டது. இதனால், வாராக்கடன் அதிகரித்தது. ஆனால், மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மாறியது. வங்கித் துறையை மேம்படுத்த திட்டமிட்டோம். வாராக் கடனை குறைத்தல், வங்கிகளின் மூலதனத்தை மறு பயன்பாடு செய்தல், வங்கிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு சீர்திருத்தம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினோம். கடன் வழங்குதலை முறைப்படுத்தினோம்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 9 ஆண்டுகளில் லாபம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. 2013-14 நிதி ஆண்டில் பொதுத் துறை வங்கிகளின் லாபம் ரூ.36,270 கோடியாக இருந்த நிலையில் 2022-23 நிதி ஆண்டில் அது ரூ.1.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
வங்கிகள் இந்த வெற்றியைப் பேசி சும்மா இருந்துவிடக் கூடாது. வங்கியின் செயல்பாட்டில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். வங்கிகள் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவது நமது கடமை.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.