

புதுடெல்லி: கடந்த ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.61 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாத வசூலைவிட 12% அதிகம் ஆகும்.
ஜிஏஸ்டி வசூல் குறித்து மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த ஜூன் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1,61,497 கோடி வசூலாகி உள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டின் ஜூன் மாத வரி வசூலைவிட 12% அதிகம் ஆகும்.
இதுபோல் ஜிஎஸ்டி அறிமுகமானது முதல் 4-வது முறையாக மாதாந்திர வரி வசூல் ரூ.1.6 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது. கடந்த ஜூன் மாத ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூலில் மத்திய ஜிஎஸ்டி ரூ.31,013 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.38,292 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.80,292 கோடி ஆகும். செஸ் வரியாக ரூ.11,900 கோடி வசூலாகி உள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் வரி பகிர்வுக்குப் பிறகு மத்திய அரசின் வரி வருவாய் ரூ.67,237 கோடியாகவும் அனைத்து மாநில அரசுகளின் வரி வருவாய் ரூ.68,561 கோடியாகவும் உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத வகையில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலானது. மே மாதம் ரூ.1.57 லட்சம் கோடி வசூலானது.
இதுபோல உள்நாட்டு பரிவர்த் தனை மூலம் (சேவை இறக்குமதி உட்பட) கிடைத்த வருவாய் ஜூன் மாதத்தில் 18% அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.