

தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.3,610 கோடி வரையிலான பரிவர்த்தனை விவரங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 533 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களுடன் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலகம் தூத்துக்குடி வி.இ. சாலையில் உள்ளது.
இந்த அலுவலகத்துக்கு கடந்த 27-ம் தேதி காலை மதுரை, திருச்சி, சேலம், கோவையிலிருந்து வருமான வரித் துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் 16 பேர் வந்தனர். வங்கியின் தலைமைஅலுவலகத்தில் உள்ள முக்கிய அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்தனர். இந்த சோதனை சுமார் 20 மணி நேரம் நீடித்தது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில், வருமான வரித் துறையிடம் தாக்கல் செய்த நிதிப்பரிவர்த்தனை தொடர்பான அறிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், வருமான வரித் துறை சட்டம் 285 பிஏ-ன் கீழ் சோதனை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த சோதனைதொடர்பாக வருமான வரித் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக பணப் பரிவர்த்தனைகள் மேற்கொண்ட (எஸ்.எப்.டி.) கணக்குகள் குறித்த முழு விவரத்தை, வங்கி நிர்வாகம் வருமான வரித் துறைக்கு தாக்கல்செய்யவில்லை என்பது தெரியவந்தது. அந்த வகையில் 10,000-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு ரூ.2,700 கோடி முதலீடு வந்த விவரம், ரூ.110 கோடி மதிப்பிலான கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், ரூ.200 கோடி மதிப்பிலான டிவிடென்ட் வழங்கப்பட்ட விவரம், ரூ. 600 கோடி மதிப்பிலான பங்குகள் குறித்த விவரங்களை வங்கி நிர்வாகம் தாக்கல் செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு வருமான வரித் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மொத்தம் ரூ.3,610 கோடி மதிப்பிலான பரிவர்த்தனை விவரங்களை, வங்கி நிர்வாகம் வருமான வரித் துறையிடம் தாக்கல் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.