

தொடர்ந்து உயர்ந்து வரும் இந்திய பங்குச்சந்தைகள் புதன் கிழமையும் உயர்ந்தே முடிவடைந்தது. சென்செக்ஸ் 121 புள்ளிகள் உயர்ந்து 26147 புள்ளியைத் தொட்டது. அதே போல நிப்டி 27.9 புள்ளிகள் உயர்ந்து 7795 புள்ளியைத் தொட்டது. ஆனால் வர்த்தகத்தின் இடையே நிப்டி அதிகபட்சமாக 7809 என்ற புள்ளியை தொட்டது நிப்டி.
இந்த மாதத்தில் 7800 புள்ளி களுக்கு மேலே நிப்டி செல்வது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஜூலை 8ம் தேதி நிப்டி 7800 புள்ளிகளுக்கு மேலே சென்றது. அப்போதைய 7808 என்ற அதிகபட்ச புள்ளியைத் தொட்டது. இப்போது 7809 என்ற புதிய உச்சத்தை நிப்டி அடைந்துள்ளது. சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே 26188 புள்ளியை தொட்டது.
அமெரிக்க பொருளாதார தகவல்கள் ஐடி துறைக்கு சாதகமாக வந்ததால் ஐடி பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன. மேலும் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்களின் முதலீடு அதிகமாக இருந்ததால் பங்குச்சந்தைகள் உயர்ந்தன. செவ்வாய்க் கிழமை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் (எப்பிஐ) 412 கோடி ரூபாயை முதலீடு செய்தார்கள். தொடர்ந்து ஏழாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியக் குறியீடுகள் உயர்ந்து முடிந்தாலும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் சரிந்து முடிவடைந்தன. சிஎன்எக்ஸ் மிட்கேப் 0.42 சதவீதம் சரிந்தும், பிஎஸ்இ ஸ்மால் கேப் 0.63 சதவீதம் சரிந்தும் முடிவடைந்தன.
ஐடி, டெக்னாலஜி மற்றும் மீடியா பங்குகளில் வாங்கும் போக்கும் ஹெல்த்கேர் மற்றும் மெட்டல் பங்குகளில் விற்கும் போக்கும் அதிகமாக இருந்தது. நடுத்தர காலத்தில் ஏற்றம் இருக்கும் என்றாலும் பொதுத்துறை பங்குகளில் சிறிய அளவில் முதலீடு செய்யலாம் என்று கோட்டக் செக்யூரெட்டீஸ் நிறுவனத்தின் டெக்னிக்கல் அனலிஸ்ட் ஸ்ரீகாந்த் சவுகான் தெரிவித்தார்.