

புள்ளியியல் விரும்பாத பெரும் புள்ளி நான். கண்கள் சிவக்க விஜயகாந்த் வசனம் பேசினால் மட்டும் ரசிப்பேன். முனைவர் பட்டம் வரை கையாண்டும் எண்களுடன் சினேகம் கொள்ள முனைப்புக் காட்டவில்லை. பின் கார்ப்பரேட் வந்தபின் கொஞ்சம் புள்ளி விவரமும் நிறைய இங்கிலீஷுமாய் பி.பி.டி போடும் ஆராய்ச்சிகளைப் பரிகாசம் செய்வதோடு சரி. பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
நிர்வாகத்தில் எண்கள்தான் பிரதானம். அதைத் தேவைப்படும் அளவிற்கு மட்டும் பயன்படுத்துவேன்.
உள்ளுணர்வு, உடல் மொழி, குழு மனம், புரிதல், பயிற்சித்தல், ஆலோசனை என என் உளவியல் சார்ந்த பயணத்தில் எல்லாம் எண்கள் இல்லாத தகவல்கள்தான் பிரதானமாக இருந்தன. வலது மூளை பயன்பாட்டிலேயே வண்டி ஓடிக்கொண்டிருந்தது.
தகவல் தொழில் நுட்பத்தால் வியாபார அறிவு பெருகி எல்லாத் துறைகளிலும் Analytics, Business Intelligence போன்ற வார்த்தைகள் புழக்கத்தில் வந்தபோது கூட என் குறைந்தபட்ச புரிதல் போதும் என்று நினைத்தேன்.
ஆனால் விக்டர் மேயர் ஷான்பர்கர் மற்றும் கென்னத் குகியர் எழுதிய பிக் டேட்டா புத்தகம் என்னை நிலை குலைய வைத்தது என்றால் அது மிகையல்ல. விக்டர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர். கென்னெத் தி எகானமிஸ்ட் பத்திரி கையின் தகவல் ஆசிரியர் (Data Editor).
புத்தகத்தின் ஆரம்பமே படு சுவாரஸ்யமாக இருந்தது. பறவைக் காய்ச்சல் பரவ ஆரம்பித்திருந்த நேரம். என்ன ஏது என்று தெரியாமல் அரசுகளும் மருத்துவத் துறைகளும் தடுமாறிக் கொண்டிருந்தன. யாருக்கு என்ன வைத்தியம் எப்படிச் செய்வது, எவ்வளவு மருத்துவர்கள் தேவை, அடுத்து எங்கு பரவும், எவ்வளவு செலவு பிடிக்கும் என எந்தத் தகவலும் தெரியாது.
அந்த நேரத்தில் கூகுள் நிறுவனத்தினர் நேச்சர் எனும் அறிவியல் இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அந்த வியாதி எங்கு பரவும் அடுத்து என்று கூகுள் தகவல்கள் மூலம் கண்டுபிடிக்கலாம் என்றது அந்த கட்டுரை. அதி நவீன வசதிகள் கொண்ட அமெரிக்க அரசாங்கமே இதைக் கண்டு ஆடிப்போனது. இது எப்படி சாத்தியம்?
விளக்கியது கூகுள். அவர்களின் தேடல் சேவை மூலம் தினசரி 3 பில்லியன் தேடல் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. தினம் தினம் சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதால் உலகின் மிகப்பெரிய தகவல் வங்கி எனச் சொல்லலாம்.
இது கொண்டு, நோயின் அறிகுறிகள் கொண்டு தேடியவரின் பூகோளமும் நோயின் தீவிரம், ஆகக் கூடிய செலவு என பல நுணுக்கமான கண்டுபிடிப்புகள் செய்யலாம். இவ்வளவு வேகமாக துல்லியமாக கணிக்கக் கூடிய சக்தி கூகுளுக்குத்தான் உண்டு என்றும் தெரிவித்தது.
அணு ஆயுதம் முதல் ஆதம்பாக்கம் மாமி மெஸ் வரை எதைத் தேடினாலும் அது பாதுகாக்கப்படுகிறது என்றால் நம்மிடம் உள்ள தகவல்கள் கடவுள் போல செயல்படக் கூடியவை என்று தெரிகிறது.
2003ல் ஓரென் எட்சியோனி என்பவர் விமான பயணம் செய்கையில் பக்கத்து பயணியிடம் விமானக் கட்டணம் பற்றி விசாரித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு முன்னர் தான் வாங்கிய கட்டணத்தை விடக் குறைவாக, அதுவும் தாமதமாக வாங்கியிருக்கிறார் அந்த பக்கத்து சீட்காரர். கொதித்துப் போனவர் அனைத்து பயணிகளிடமும் கட்டணம் கேட்டிருக்கிறார். தாறுமாறாய் இருந்தன.
பயணிகளுக்கு என்று டிக்கெட் வாங்கினால் என்ன விலை என்று தெரியாததால் இந்த ஏற்ற இறக்கங்கள். இதைக் கண்டு கொண்ட அந்த தகவல் தொழில் நுட்ப ஆராய்ச்சியாளர் அனைத்து விமான கட்டண தகவல்களையும் பெறுகிறார். பல விமான கட்டண மென்பொருள்களையும் ஆராய்கிறார். பின்னர் ஃபேர்காஸ்ட் எனும் இண்டர்நெட் புக்கிங் மூலம் விமானப் பயணச் சீட்டு விற்கும் கம்பெனி தொடங்குகிறார்.
சூட்சமம் இதுதான். தகவல்கள் பெறுவது பெரிதல்ல. அந்தத் தகவல்கள் மூலம் நம் வாழ்க்கைக்கு, தொழிலுக்கு ஏற்ற கற்பிதங்களைப் பெறுவது எப்படி என்பதில்தான் வெற்றி.
வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்குத் தகவல்கள் வைத்திருக்கிறோம். எல்லாவற் றையும் பல முறை சேமித்தும் வைத்திருக்கிறோம். ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் இன்று நம்ப முடியாத அளவுக்குத் தகவல்களை வைத்திருக்கின்றன.
இந்தத் தகவல் பெருங்கடலில் மூழ்கி தனக்கான முத்துக்களை எடுக்கும் வித்தகர்களுக்குத்தான் இனி எதிர்காலம்.
ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் கூறினார்: “எனக்குத் தேவை 200 வில்லா வாங்கும் வாடிக்கையாளர்கள்தான். அவர்கள் எங்கு கிடைப்பார்கள் என்று தெரியாமல்தான் கோடிக்கணக்கில் விளம்பரத்திற்கு செலவு செய்கிறேன்!”
பிஸினஸ் இண்டெலிஜென்ஸ் மூலம் நமக்குக் கிடைக்கின்ற பெருந்தகவலைக் கடைந்தால் அந்த 200 பேரை அதிக செலவில்லாமல் பிடிக்கலாம் என்று தெரிகிறது.
ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர் அட்டை கொடுத்து தள்ளுபடி விற்பனை, பரிசுகள் என கொடுப்பது இந்த வாடிக்ைகயாளர் தகவல் சேகரிப்பிற்குத்தான்.
ஆனால் பிக் டேட்டாவின் வீச்சு ஒளியைப் போல வேகமாக செல்லக் கூடியது. விபத்து நடப்பதைத் தடுக்கலாம். குற்றவாளியை அவன் குற்றம் புரிவதற்குள் பிடிக்கலாம். நோய் பரவுவதைத் தடுக்கலாம். இப்படி எல்லாம் சாத்தியம் எனத் தெரிகிறது.
முன்பு எல்லாவற்றையும் சரித்திர ரீதியாக ஆராய்ந்து காரணம் கண்டறிந்து செயல்பட்டோம். இனி ஒரு விஷயம் நடக்கையிலே அதன் போக்குடன் சென்று அதைக் கையாளும் தகுதியை நமக்கு இந்த பெருந்தகவல் அளிக்கிறது என்கிறார்கள் ஆசிரியர்கள்.
இன்னொன்றும் தெரிகிறது. நாம் ஒரு நிர்வாண உலகில் இருக்கிறோம். எந்த தகவலும் யாருக்கு வேண்டுமானாலும் கிட்டும். எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இது தனி நபர் சுதந்திரம் முதல் தேச பாதுகாப்பு வரை பாதிக்கப்படலாம்.
இந்தக் கேள்விகளையும் சேர்த்துக் கேட்பது ஆசிரியர்களின் நடு நிலையைக் காட்டுகிறது.
நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் இது கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். உங்கள் துறையும் நீங்களும் எப்படி மாறிப் போக உள்ளீர்கள் என்று யோசிக்க வைக்கும்.
பெருந்தகவல் ஒரு பெருங்கடல். இது ஒரு சரித்திர, அறிவியல் பரிணாமம். இதை நம் சமூகம் எப்படி கொண்டு செல்லும் என்பது கவனிக்க வேண்டியது.
பெருந்தகவல் வரமா சாபமா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!
gemba.karthikeyan@gmail.com