

கோவை: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) சார்பில், மின்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மின் கட்டண உயர்வால் தமிழ்நாட்டில் உள்ள குறுந் தொழில் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. மாதாந்திர நிலைக் கட்டணம் 112 கிலோ வாட் வரை ரூ.35-ஆக இருந்த நிலையில் 112 கிலோ வாட்டை இரண்டாக பிரித்து 50 கிலோ வாட் வரை ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.75, 51-ல் இருந்து 112 வரை ரூ.150 என உயர்த்தப்பட்டுள்ளது.
உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை கணக்கிட மீட்டர்கள் இல்லாத நிலையில் குறுந்தொழில் முனைவோர் மொத்தமாக பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை கணக்கிட்டு அதில் 8 மணி நேரத்துக்கு உச்சபட்ச கட்டணமாக 15 சதவீதம் கூடுதலாக செலுத்தப்பட்டு வருகிறது.
குறு,சிறு தொழில்கள் நலனை கருத்தில் கொண்டு ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட நிலைக் கட்டணத்தையே மீண்டும் வசூலிக்கவும், உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை திரும்ப பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.