Published : 28 Jun 2023 10:18 AM
Last Updated : 28 Jun 2023 10:18 AM

தக்காளி விலை உயர்வுக்கு என்ன காரணம்? - வியாபாரிகள் விளக்கம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனையானது. தற்போது இருமடங்காக விலை உயர்ந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தக்காளி விலையேற்றம் குறித்து விழுப்புரத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, தற்போது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் வரத்து குறைவாக உள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலம் மதனப்பள்ளியில் இருந்து வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதனால் தக்காளி மட்டுமல்லாது இஞ்சி, அவரை உட்பட பல காய்கறிகளின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளளது. இன்றைய நிலவரப்படி இஞ்சி ரூ.300, பீன்ஸ் ரூ.70, பாகற்காய் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகள் விலையேற்றம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆண்டின் எல்லா காலங்களிலும் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை ஒரே சீராக இருப்பதையும், உழவர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதையும் உறுதி செய்வதற்காக வேளாண் விளை பொருள் விலை நிர்ணய ஆணையத்தையும், விளைபொருள் கொள்முதல் வாரியத்தையும் தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

அவற்றின் மூலம் வேளாண் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து, அரசே கொள்முதல் செய்ய வேண்டும். அத்துடன் விளை பொருட்கள் அதிகமாக விளையும் காலங்களில் அவற்றை சேமித்து வைப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகளை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x