

பொள்ளாச்சி: தமிழகத்திலேயே மிகப்பெரிய கால்நடை சந்தையாக உள்ள பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், வரும் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகை வருவதை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஆட்டுச் சந்தைக்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த வெள்ளாடு, செம்மறி ஆடு என சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன.
ஆடுகளை வாங்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். மேலும் ஆடுகளின் விலையும் அதிகரித்திருந்தது. எடைக்கு ஏற்ப ஓர் ஆடு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விலைபோனது. இது குறித்து ஆட்டு வியாபாரிகள் கூறுகையில், “பக்ரீத் பண்டிகை வருவதால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு, விலை அதிகரித்துள்ளது. ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்ததால், வர்த்தகம் ரூ.1 கோடியை தாண்டியது” என்றனர்.