

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி சட்டத்தின்படி (1934), ரிசர்வ் வங்கிக்கு 4 துணை ஆளுநர்கள் இருக்க வேண்டும். இதில் இருவர் அவ்வங்கியைச் சேர்ந்தவராகவும் ஒருவர் வர்த்தக வங்கிகளைச் சேர்ந்தவராகவும் மற்றொருவர் பொருளாதார நிபுணராகவும் இருக்க வேண்டும்.
இப்போது மைக்கேல் தேவவரத பத்ரா, எம்.ராஜேஷ்வர் ராவ், டி.ரபி சங்கர், மகேஷ் குமார் ஜெயின் ஆகிய 4 பேர் துணை ஆளுநராக உள்ளனர். இதில் மகேஷ் குமார் ஜெயின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.
இதையடுத்து, மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையிலான நியமன குழு, ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமனை நியமிக்க நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. ஜானகிராமன் இப்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
இவர் 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக துணை ஆளுநர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும். தேவைப்பட்டால் மேலும் 2 ஆண்டுகளுக்கு அவர்களுடைய பதவி நீட்டிக்கப்படலாம். துணை ஆளுநரின் மாத சம்பளம் (படிகள் உட்பட) ரூ.2.25 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.