பசுமைக் குடில் சாகுபடிக்கு அரசு மானியம்

பசுமைக் குடில் சாகுபடிக்கு அரசு மானியம்
Updated on
2 min read

பாதுகாக்கப்பட்ட சூழலில் செடிகளை வளர்த்து, அதிக லாபம் பெறும் வகையில் விவசாயிகள் பலர் தற்போது பசுமைக் குடில்கள், நிழல் வலைக் குடில்கள் போன்றவற்றை அமைத்து சாகுபடி செய்து வருகின்றனர்.

வணிக ரீதியாக லாபம் தரும் மலர்கள், காய்கறிகள் உற்பத்தியைப் பெருக்க இதுபோன்ற குடில்கள் பயன் படுகின்றன. இத்தகைய குடில்களை அமைப்பதற்காக ஆகும் செலவில் சுமார் 50 சதவீதத் தொகையை தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் தோட்டக் கலைத் துறை விவசாயிகளுக்கு மானியமாக வழங்கி வருகிறது.

பசுமைக் குடில்கள்

குடில்களின் வெளியே தட்ப வெப்ப நிலை வேறுபட்டாலும், செடிகள் நன்கு செழித்து வளர்வதற்கு உகந்த வெப்ப நிலையை குடிலுக்கு உள்ளே பராமரிக்கும் பணிகளை பசுமைக் குடில்கள் செய்கின்றன. பெரும்பாலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டங்களில் அதிக அளவில் பசுமைக் குடில்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த மாவட்டங்களைத் தவிர ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், தேனி, திருச்சி, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் பசுமைக் குடில்களை அறிமுகப்படுத்தும் பணியில் தோட்டக் கலைத் துறையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். நடப்பாண்டில் 4 லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில் பசுமைக் குடில்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

500 சதுர மீட்டர் பரப்பு வரை பசுமைக் குடில்கள் அமைத்திட ஒரு சதுர மீட்டருக்கு ரூ.530 தோட்டக் கலைத் துறை மானியம் வழங்குகிறது.

1008 சதுர மீட்டர் பரப்பளவு வரை அமைத்திட சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ.468, அதற்கு மேல் 2080 சதுர மீட்டர் வரையிலும் சதுர மீட்டருக்கு ரூ.445, இன்னும் கூடுதலாக 4000 சதுர மீட்டர் வரை பசுமைக் குடில் அமைப்போருக்கு சதுர மீட்டருக்கு ரூ.422 என்ற வகையில் அரசால் மானியம் வழங்கப்படுகிறது. இது குடில் அமைப்பதற்கான செலவில் சுமார் 50 சதவீதமாகும்.

நிழல் வலைக் குடில்

சூரிய வெப்பத்தின் கடுமையைக் குறைத்து, செடிகளுக்கு தேவையான அளவு மட்டும் சூரிய ஒளி கிடைக்கும் வகையில் நிழல் வலைக் குடில்கள் அமைக்கப்படுகின்றன. இந்தக் குடில்களை அமைத்திட 50 சதவீத மானியமாக சதுர மீட்டருக்கு ரூ.355 வரை தோட்டக் கலைத் துறையினர் வழங்குகின்றனர்.

ரோஜா, கார்னேஷன், ஜெர்பரா, சாமந்தி பூ போன்ற மலர்ச் செடிகளையும், வெள்ளரி, குடை மிளகாய், தக்காளி போன்ற காய்கறிச் செடிகளையும் சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்தகைய குடில்களை அமைத்து அதிக லாபம் பெறலாம் என தோட்டக் கலைத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய குடில்கள் அமைப்பதற்கான மானிய உதவிகளை எவ்வாறு பெறுவது என்பது தொடர்பாக அருகிலுள்ள வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலகங்களையோ அல்லது மாவட்ட அளவில் செயல்படும் தோட்டக் கலை இணை அல்லது துணை இயக்குநர் அலுவலகங்களையோ அணுகி விவசாயிகள் தேவையான விவரங்களைப் பெறலாம்.

devadasan.v@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in