Last Updated : 28 Oct, 2017 09:47 AM

 

Published : 28 Oct 2017 09:47 AM
Last Updated : 28 Oct 2017 09:47 AM

பொதுத்துறை வங்கி முதலீட்டுக்கு ஜீரோ கூப்பன் கடன் பத்திர வெளியீடு: நிதி அமைச்சகம் பரிசீலனை

புதுடெல்லிபொதுத்துறை வங்கிகளில் அரசு மேற்கொள்ள உள்ள முதலீட்டைத் திரட்டுவதற்காக ஜீரோ கூப்பன் கடன் பத்திரங்களை வெளியிடுவது குறித்து நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

ஜீரோ கூப்பன் கடன் பத்திரம் என்பது அதன் முக மதிப்பை விட தள்ளுபடி விலையில் அளிக்கப்படும். குறிப்பிட்ட முதிர்வுக் காலத்தின்போது முக மதிப்புத் தொகை அளிக்கப்படும். உதாரணத்துக்கு ஒரு பத்திரத்தின் முக மதிப்பு ரூ.100 என்றால் அது முதலீட்டாளர்களுக்கு ரூ.85 விலையில் வழங்கப்படும். இரண்டு ஆண்டு முதிர்வுக்குப் பிறகு கடன் பத்திரம் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 அளிக்கப்படும். அதாவது ரூ.100 முக மதிப்பு கொண்ட கடன் பத்திரத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அளிக்கும் வட்டித் தொகை ரூ.15 ஆகஇருக்கும்.

பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலையை மேம்படுத்த ரூ.2.11 லட்சம் கோடி தொகையை அரசு முதலீடு செய்யப் போவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சர்வதேச அளவீடான பேசல்-3 நிலையை வங்கிகள் எட்ட முடியும்.

வங்கிகளில் முதலீடு செய்வதற்கான நிதி திரட்டுவது குறித்து பல்வேறு வழிவகைகள் ஆராயப்படுகின்றன. அதில் ஒன்றுதான் 0% கடன் பத்திர வெளியீடு மூலம் திரட்டுவதாகும் என்று நிதி அமைச்சககத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய கடன் திரட்டும் வழிவகைகள் அனைத்துமே ஆரம்ப நிலை பரிசீலனையில் உள்ளன. ரூ.1.35 லட்சம் கோடி கடன் பத்திர வெளியீடு குறித்து அடுத்த மாதம் இறுதி செய்யப்படும் என்றும் அதிகாரி தெரிவித்தார். எஞ்சிய தொகை பட்ஜெட் ஒதுக்கீடு, பங்குகளை விற்பதன் மூலம் நிறைவேற்றப்படும் என்றுதெரிகிறது.

பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.18,139 கோடி. ரூ.58 ஆயிரம் கோடியை வங்கிகளில் அரசுக்குள்ள பங்குகளை விற்பதன் மூலம் வங்கிகள் திரட்டிக் கொள்ளும். மீதமுள்ள ரூ.1.35 லட்சம் கோடி இரண்டு ஆண்டுகளில் வங்கிகளில் முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு அளவு 52 சதவீத அளவுக்குக் குறையும்.

பொதுத்துறை வங்கிகளில் அரசு முதலீடு குறித்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இத்துடன் வங்கிகளின் சீர்திருத்த நடவடிக்கையும் தொடரும் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் வங்கிகளின் நிதி நிலை ஸ்திரமடையும் என்று அவர் சுட்டிக் காட்டியிருந்தார். கடன் பத்திர வெளியீடு தொடர்பான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்றும் ஜேட்லி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x