Published : 16 Jun 2023 06:10 AM
Last Updated : 16 Jun 2023 06:10 AM

இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் சார்பில் சென்னையில் ஜூன் 24-ல் எம்எஸ்எம்இ மாநாடு தொடக்கம்

சென்னை: தொழில்முனைவோர் மற்றும் வங்கி அதிகாரிகள் இடையே இணைப்பை ஏற்படுத்தும் வகையில், இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் தென்னிந்திய கவுன்சில் சார்பில் நடைபெறும் எம்எஸ்எம்இ மாநாடு சென்னையில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.

இது தொடர்பாக இந்திய பட்டய கணக்காளர் நிறுவன (ICAI) தென்னிந்திய கவுன்சில் தலைவர் எஸ்.பன்னா ராஜ் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை (MSME), இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும்11 கோடியே 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதம், ஏற்றுமதியில் 50 சதவீதம் பங்களிக்கின்றன.

பல்வேறு பின்னடைவுகள்: பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம், கரோனா தொற்று பரவல், புவிசார் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்டவை காரணமாக இத்துறை பல்வேறு பின்னடைவுகளை சந்தித்தது.

இந்நிலையில், எம்எஸ்எம்இ துறையைவலுப்படுத்த, ஐசிஏஐ தென்னிந்திய கவுன்சில் சார்பில் சிறு, குறு தொழில்முனைவோர், வங்கி அதிகாரிகள், பட்டய கணக்காளர் ஆகியோரிடையே இணைப்பை ஏற்படுத்தி, தொழில்முனைவோர் தங்கள் தொழிலில் சிறந்து விளங்கும் நோக்கில் மாநாடு நடத்தப்படுகிறது.

அதன்படி, வரும் 24, 25-ம் தேதிகளில் எம்எஸ்எம்இ மாநாடு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்று, பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

சிறந்த நிறுவனங்களுக்கு விருது: இந்த மாநாட்டில், எம்எஸ்எம்இ துறையில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் https://www.sirc-icai.org/common_events.php என்ற இணைய பக்கத்தில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். ஐசிஏஐ தென்னிந்திய கவுன்சில் துணைத் தலைவர் ஏ.பி.கீதா, முதல்வர் ஆர்.விஜயலட்சுமி உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x