Published : 16 Jun 2023 04:13 AM
Last Updated : 16 Jun 2023 04:13 AM

இந்தியாவிலிருந்து ரூ.63,969 கோடிக்கு கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி

தூத்துக்குடி: நாட்டின் அந்நிய செலாவணியை ஈட்டுவதில் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி மிக முக்கிய பங்காற்றி வருகிறது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளில் இந்தியாவின் கடல் உணவு பொருட்களுக்கு அதிக தேவை இருப்பதால் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தூத்துக்குடி மண்டல அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: 2022-2023-ம் நிதியாண்டில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர் கொண்ட போதிலும் ரூ.63,969.14 கோடி மதிப்புள்ள 17,35,286 மெட்ரிக் டன் கடல் உணவு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் அளவு அடிப்படையில் 26.73 சதவீதமும், பணம் மதிப்பு அடிப்படையில் 11.08 சதவீதமும் அதிகரித்துள்ளது. மொத்த ஏற்றுமதியில் உறைநிலை இறாலின் பங்கு 40.98 சதவீதம் ஆகும். 2022- 2023-ம் நிதியாண்டில் ரூ.43,135.58 கோடி மதிப்புள்ள 7,11,099 டன் உறைநிலை இறால் ஏற்றுமதியாகியுள்ளது.

அமெரிக்கா 2,75,662 டன், சீனா 1,45,743 டன், ஐரோப்பிய யூனியன் 95,377 டன், தென்கிழக்கு ஆசியா 65,466 டன், ஜப்பான் 40,975 டன் உறைநிலை இறாலை இறக்குமதி செய்துள்ளது. வரி இறால் (பிளாக் டைகர் ஸ்ரிம்ப்) ஏற்றுமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அளவு அடிப்படையில் 74.06 சதவீதமும், ரூபாய் மதிப்பு அடிப்படையில 68.64 சதவீதமும் அதிகரித்துள்ளது.

2022- 2023-ல் ரூ.2,564.71 கோடி மதிப்புள்ள 31,213 மெட்ரிக் டன் வரி இறால்ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மொத்த ஏற்றுமதியில் வரி இறால் பங்கு 25.38 சதவீதமாகும். வரி இறாலை ஜப்பான் அதிகமாக இறக்குமதி செய்துள்ளது. உறைநிலை மீன் ஏற்றுமதி அளவு அடிப்படையில் 62.65 சதவீதமும், ரூபாய் மதிப்பு அடிப்படையில் 58.51 சதவீதமும் அதிகரித்து ரூ.5,503.18 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் கனவாய், கருவாடு போன்றவற்றின் ஏற்றுமதியும் கனிசமாக அதிகரித்துள்ளது. இந்திய கடல் உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் முக்கிய இறக்குமதியாளராக அமெரிக்கா உள்ளது. இரண்டாவது இடத்தில் சீனாவும், 3-வது இடத்தில் ஐரோப்பிய யூனியன், 4-வது இடத்தில் தென்கிழக்கு ஆசியா, 5-வது இடத்தில் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x