

சென்னை: உலகளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியா 3-வது மிகப்பெரிய நாடாக நடப்பாண்டில் உருவெடுக்கும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னையில் ‘பிக்கி’ கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் பேசியதாவது:
இந்திய பொருளாதாரம் கடந்த 2014-ல் 10-வது இடத்தில் இருந்த நிலையில் வரும் 2027-ல் 3-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மில்லினியம் தொடங்கியதிலிருந்து உலக ஜிடிபியில் இந்தியாவின் பங்களிப்பு 6 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதையடுத்து, நடப்பாண்டில் உலக ஜிடிபியில் இந்தியா 3-வது பெரிய நாடாக உருவெடுக்கும்.
2022-23-ம் நிதியாண்டில் ரியல் ஜிடிபி வளர்ச்சி 7.2சதவீதம் என்ற வலுவான அளவை எட்டியுள்ளது. இறுதி மதிப்பீட்டில் இது இன்னும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வளர்ச்சி நம்பிக்கை தரும் விதத்தில் உள்ளது. இதற்கு, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தொடர்ந்து மேற்கொண்டு வரும் சீரமைப்பு நடவடிக்கைகளே முக்கிய காரணம். அதன் தொடர்ச்சியாக, நடப்பு நிதியாண்டிலும் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.5% எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.
தனியார் நிறுவனங்களின் முதலீட்டு நடவடிக்கைகள் வேகமெடுத்து வருவதால் வேலைவாய்ப்பும் கணிசமான அளவில் அதிகரிக்கும். இவ்வாறு அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.