

பெங்களூரு: விங்க்ஸ் இவி பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமாகும்.
இந்நிறுவனம் உருவாக்கியுள்ள ‘ராபின்’ என்ற சிறிய வகை கார், குறுகிய பகுதிகளில் பயணிப்பதற்கு சிறந்த வாகனம் என்று நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற வாகனத் துறை தொடர்பான கருத்தரங்கு நிகழ்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோ மொபிலிட்டி என்ற தலைப்பில் ஆம்ஸ்டர்டாமில் வாகனத் துறை கருத்தரங்கு ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் நடந்தது. அந்நிகழ்வில், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த புதுமையான வாகனத் தயாரிப்புகள் பங்கேற்றன. அதில், என்இவி என்றழைக்கப்படும் சிறிய வகை வாகனப் பிரிவில் சிறந்த வாகனம் என்ற விருது விங்க்ஸ் இவி உருவாக்கியுள்ள ராபின் மைக்ரோ காருக்கு கிடைத்துள்ளது.
கார் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் ராபினில், இருவர் பயணிக்க முடியும். பேட்டரியில் இயங்கும் இந்த வாகனத்தின் அதிகபட்ச வேகம் 60 கிமீ. ஒருமுறை சார்ஜ் செய்தால், இந்த வாகனத்தில் 90 கிமீ தூரம் வரையில் பயணிக்க முடியும்.