6,500 கோடீஸ்வரர்களை இந்தியா இழக்கும் - ஹென்லி ஆய்வில் தகவல்

6,500 கோடீஸ்வரர்களை இந்தியா இழக்கும் - ஹென்லி ஆய்வில் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: ஹென்லி பிரைவேட் மைகிரேஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலக அளவில் முதலீடு மற்றும் அதிக சொத்துகளைக் கொண்ட செல்வந்தர்கள் குறித்து ஹென்லி தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில், நடப்பு 2023-ம் ஆண்டில், 1 மில்லியன் டாலர் அல்லது அதற்கும் அதிகமாக நிகர சொத்து மதிப்புடைய 6,500 நபர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இந்தியாவில் மில்லியனர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிக நிகர சொத்து மதிப்பைக்கொண்ட நபர்கள் அதிகளவில் வெளியேறும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து இந்தாண்டில் மட்டும் 13,500 கோடீஸ்வரர்கள் புலம்பெயர்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கோடீஸ்வரர்களை அதிகம் இழக்கும் பட்டியலில் இந்தியா நடப்பாண்டில் இரண்டாவது இடத்தில் இருந்தபோதிலும், கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது தற்போது நிலைமை மேம்பட்டே காணப்படுகிறது. கடந்தாண்டில் இந்தியாவிலிருந்து வெளியேறிய 7,500கோடீஸ்வரர்களுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் 1,000 குறைவாகவே உள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் கோடீஸ்வரர்கள் இடம்பெயர்ந்து செல்வது படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் முறையே 1,22,000 மற்றும் 1,28,000 கோடீஸ்வரர்கள் உலகளவில் இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஹென்லி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in