Published : 06 Oct 2017 09:09 AM
Last Updated : 06 Oct 2017 09:09 AM

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் தலைவர், நிர்வாக இயக்குநர் பதவியை பிரிக்க வேண்டும்: உதய் கோடக் தலைமையிலான குழு பரிந்துரை

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக கோடக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோடக் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு தன்னுடைய பரிந்துரைகளை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் (செபி) நேற்று சமர்ப்பித்தது. டாடா சன்ஸ், இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களில் பிரச்சினை ஏற்பட்டிருக்கும் சமயத்தில் இந்த குழுவின் பரிந்துரைகள் வெளியாகியுள்ளது.

நிர்வாகத்தை சிறப்பாக நடத்த பல ஆலோசனைகளை இந்த குழு பரிந்துரை செய்திருக்கிறது. இதில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகளை பிரிக்கவேண்டும். தவிர தினசரி அலுவல் இல்லாத இயக்குநர் மட்டுமே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த குழு பரிந்துரை செய்திருக்கிறது.

இந்த குழு வழங்கிய பரிந்துரைகளில் முக்கியமானவையாக, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஆறு இயக்குநர்கள் இருக்க வேண்டும். ஓர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஐந்து முறையாவது இயக்குநர் குழு கூடியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட இயக்குநர் கூட்டங்களில் இயக்குநர்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

தற்போதைய இயக்குநர் குழுவில் மூன்றில் ஒருவர் தன்னிச்சையாக முடிவெடுக்கும் இயக்குநராக இருப்பார் (independent director), ஆனால் பாதிக்கும் மேல் தன்னிச்சையாக முடிவெடுக்கும் இயக்குநர்கள் இருக்க வேண்டும் என புதிய பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு குறைந்தபட்சம் ஆண்டு ஊதியம் ரூ.5 லட்சமாக இருக்க வேண்டும். இயக்குநர் குழுவில் கலந்து கொள்வதற்கான கட்டணம் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை இருக்க வேண்டும்.

நிறுவனத்தின் நிறுவனர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களின் சம்பளம் ரூ.5 கோடிக்கு மேல் அல்லது நிகர லாபத்தில் 2.5 சதவீதத்துக்கு மேல் இருக்கும் பட்சத்தில், பங்குதாரர்களின் அனுமதியை கட்டாயம் பெற்றாக வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மேல் இருக்கும் பட்சத்தில் நிகர லாபத்தில் 5 சதவீதத்துக்கு மேல் இவர்கள் அனைவரின் சம்பளம் இருந்தால் பங்குதாரர்களின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும்.

சந்தை மதிப்பில் முதல் 100 இடங்களில் இருக்கும் நிறுவனங்களின் இயக்குநர் குழு கூட்டங்கள் இணையத்தில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யலாம். அதேபோல சந்தை மதிப்பு அடிப்படையில் 500 இடங்களில் இருக்கும் நிறுவனங்களில் இயக்குநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு காப்பீடு எடுப்பதை கட்டாயமாக்க வேண்டும். அதேபோல முதல் 500 நிறுவனங்கள் அடுத்த கட்ட தலைமை குறித்து ஓர் ஆண்டுக்கு ஒரு முறை விவாதிக்க வேண்டும் என பல பரிந்துரைகளை இந்த குழு வழங்கி இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் இந்த குழு அமைக்கப்பட்டது. 4 மாதங்களுக்குள் பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என செபி உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து 177 பக்கங்கள் கொண்ட இந்த பரிந்துரைகள் நேற்று சமர்பிக்கப்பட்டன. இது தொடர்பாக வரும் நவம்பர் 4-ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று செபி தெரிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x