

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் பிச்சீஸ் பழங்கள் அறுவடை தொடங்கியுள்ளது. ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் பிளம்ஸ், பேரிக்காய் உள்ளிட்ட பழ வகைகள் அதிகளவில் சாகுபடியாகிறது. இங்கு விளையும் பழங்களுக்கு மவுசு அதிகம். கொடைக்கானல் வில்பட்டி, அட்டுவம்பட்டி, பெருமாள் மலை, பெரும் பள்ளம், பேத்துப்பாறை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் பிச்சீஸ் மரங்கள் அதிகமாக இருக்கின்றன.
ஜூன், ஜூலை மாதத்தில் பிச்சீஸ் பழ விளைச்சல் அதிகமாக இருக்கும். தற்போது மலைப் பகுதிகளில் பிச்சீஸ் பழங்களின் அறுவடை தொடங்கி உள்ளது. பழங்களை பறிப்பதில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கடந்த ஆண்டை விட பிச்சீஸ் பழங்களின் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது.
இருப்பினும் ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதே போல், சீசன் நிறைவடைய உள்ளதால் பிளம்ஸ் பழங்கள் வரத்து குறைந்து ஒரு கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து கொடைக்கானலைச் சேர்ந்த பழ வியாபாரிகள் கூறுகையில், பிளம்ஸ் சீசன் முடிவடைய உள்ள நிலையில், பிச்சீஸ் பழங்களின் அறுவடை தொடங்கியுள்ளது. வரத்து அதிகரித்தால் விலை குறைய வாய்ப்புள்ளது. பிச்சீஸ் பழங்களின் ருசி தனியாக இருக்கும். கேரளா, ஆந்திரா சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்குகின்றனர், என்றனர்.