Last Updated : 13 Jul, 2014 02:51 PM

 

Published : 13 Jul 2014 02:51 PM
Last Updated : 13 Jul 2014 02:51 PM

தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்: மகாலிங்கம் சிறப்புப் பேட்டி

இந்திய தொழிலக கூட்டமைப்ப்பின் (சிஐஐ) பட்ஜெட் கலந்துரையாடலுக்கு வந்திருந்தார் டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி எஸ்.மகாலிங்கம். டிசிஎஸ் நிறுவனத்தின் 15வது நபராக சேர்ந்து, 42 வருடங்களாக டிசிஎஸ்-ல் பணிபுரிந்த அவரிடம் பேசுவதற்கு விஷயங்களுக்கா பஞ்சம். டிசிஎஸ் வாழ்க்கை, ஓய்வு, தொழில்முனைவு உள்ளிட்ட பல விஷயங்களை மேலாக பேசினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற உரையாடலின் தொகுப்பு இதோ...

சார்டட் அக்கவுன்ட்டண்டான நீங்கள் டிசிஎஸ்-ல் எப்படி நுழைந்தீர்கள்?

படித்து, பயிற்சி முடிந்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். எதாவது கன்சல்டிங் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இரண்டு மூன்று வருடங்கள் வேலை பார்த்து, பிறகு எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். மூன்று நிறுவனங்களிலிருந்து ஆர்டர் வந்திருந்தது. டாடா குழுமம் என்பதால் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். அதுவரைக்கும் நான் கம்யூட்டரை பார்த்ததுகூட கிடையாது.

இந்திய ஐடி துறையின் தந்தை என்று சொல்லக்கூடிய எப்சி. கோலிதான் என்னை வேலைக்கு எடுத்து கம்ப்யூட்டரை காண்பித்தார். ஆனால் அதன் பிறகு புரோகிராம் எழுதி, பிஸினஸ்களை உருவாக்கி பல கட்டங்களை அடைந்து, 42 வருடங்களுக்கு பிறகு இரண்டு வருடங்களுக்கு முன்புதான் ஓய்வு பெற்றேன்.

நீங்கள் எப்படி புரோகிராம் எழுதினீர்கள்?

ஒரு நிறுவனத்தில் சேர்ந்து நீண்ட வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஆடிட்டிங் நிறுவனத்தில் சேர்ந்திருப்பேன். எம்பிஏ படிப்பதற்கு முன்பு இரண்டு வருடங்களுக்கு எங்காவது வேலை செய்ய வேண்டும் என்று சேர்ந்தேன். அதனால் சொல்லிக்கொடுத்ததை கற்றுக்கொண்டேன். பிறகு கம்ப்யூட்டர் தொழில் பிடித்துவிட்டது, அதன் பிறகு யோசிக்கவே நேரமில்லாமல் புதிய புதிய பொறுப்புகள் வந்ததால் அங்கேயே இருந்துவிட்டேன்.

புரோகிராமராக சேர்ந்துவிட்டீர்கள். 2003-ம் ஆண்டு சிஎப்ஓ-வாக பொறுப்பேற்றபோது அந்த சவால் எப்படி இருந்தது?

2003-ம் ஆண்டு வரைக்கும் எனக்கும் நிதிக்கும் சம்பந்தமே இல்லை. பங்குச்சந்தையில் பட்டியலிட முடிவு செய்தபோது எனக்கு சிஎப்ஓ பொறுப்பு கொடுத்தார்கள். சாப்ட்வேர், பிஸினஸ், ஆடிட்டிங் போன்றவை எனக்கு தெரியும் என்பதால் எனக்கு கொடுத்தார்கள். ஆனால் ஆரம்பத்தில் சவாலாக இருந்தது. டிசிஎஸ் பன்னாட்டு நிறுவனம், அமெரிக்க முதலீட்டாளார்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ப மாற்ற வேண்டும், டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து தனியாக கொண்டுவந்து பட்டியலிட வேண்டும், பல நாடுகளில் கிளை இருப்பதால் கரன்சி பிரச்சினையை சரி செய்ய ஹெட்ஜ் செய்ய வேண்டும், உலகம் முழுக்க இருக்கும் வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் என பலரையும் சமாளிக்க வேண்டும். சவாலான வேலையாகதான் இருந்தது.

2003 வரை நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனிக்காத நிலையில் சிஎப்ஒ பொறுப்பை ஏற்க தயக்கம் இல்லையா? வாடிக்கையாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த உங்களுக்கு எண்களுடன் பேசியது எப்படி இருந்தது.

சிஎப்ஓ-வாக இருந்தாலும் சில வாடிக்கையாளார்களை சந்திப்பதற்கு செல்வேன். அப்படிப் பார்த்தால் 1970-களில் புரோகிராமிங் வேலை கூட கடினம்தான். நீண்ட நாளைக்கு ஒரே வேலையை செய்ய முடியாது. ஹெச்.ஆர்., பிஸினஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் செய்தாகிவிட்டது. புதிய புதிய விஷயங்கள், புதிய சவால்களை உங்களை கற்றுக்கொள்ள வைக்கும்.

மற்ற ஐடி நிறுவனங்கள் உங்களுக்கு முன்பே பங்குச்சந்தையில் பட்டியல் செய்து விட்டார்கள். டிசிஎஸ் தாமததுக்கு என்ன காரணம்?

1980-களில் இருந்தே எப்போது பட்டியலிடலாம் என்ற விவாதம் நடைபெற்றது. முதலில் எதனால் லிஸ்ட் செய்ய வேண்டும் என்ற விவாதம் இருந்தது. கம்பெனி சரியாக நடந்துக்கொண்டிருக்கிறது, வருமானம் வந்துகொண்டிருக்கிறது. புதிய நிதிக்கும் பிரச்சினை இல்லை.

ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு நிறுவனத்தின் அளவு பெரிதாகவிட்டதால் லிஸ்ட் செய்ய வேண்டியதாயிற்று. மேலும் எவ்வளவு பெரிய நிறுவனம் என்பதை பங்குச்சந்தையில் பட்டியல் செய்தால் மட்டுமே மக்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு முதலீட்டாளர்களுக்கு தெரியப்படுத்த முடியும். தரமான பணியாளர்கள் வேண்டும் என்றால் கூட யார் என்பதை வெளியே தெரிவிக்க வேண்டியது அவசியம். சில சமயங்களில் ’அந்த’ கம்பெனியை விட நீங்கள் எவ்வளவு சிறிய கம்பெனி என்று என்னிடமே கேட்டிருக்கிறார்கள். இதை யாரோ கேட்டால் பிரச்சினையில்லை. வாடிக்கையாளர் இந்த கேள்வியைக் கேட்டால், அதனால் 2003-ம் ஆண்டு இதற்கான வேலையை ஆரம்பித்து 2004-ம் ஆண்டு பட்டியலிட்டோம்.

1970-களிலேயே டிசிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்துவிட்டீர்கள். ஆனால் 1980-களில்தான் இன்போசிஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வந்தன. நீங்கள் தனியாக நிறுவனம் தொடங்க வேண்டும் என்று நினைத்ததில்லையா?

சில பேருக்குதான் அப்படி ரிஸ்க் எடுக்க தோன்றும். எல்லாருக்கும் வராது. அதற்கு வேறு மாதிரியான மனநிலை வேண்டும். ரிஸ்க் எடுக்க வேண்டும். என் வேலையில் பலவிதமான ரிஸ்க் எடுத்திருக்கிறேன். நான் படித்தது ஒன்று, வேலை பார்த்தது வேறு. ஆனால் பிஸினஸ் ஆரம்பிக்க தேவையான ரிஸ்க் எடுக்கும் மனநிலை அப்போது இல்லை.

டிசிஎஸ் சந்திரசேகரன், காக்னிசெண்ட் லஷ்மி; சந்திரசேகரன், மைண்ட்டீரி கிருஷ்ணகுமார், ஜானகிராமன், ஜென்சார் கணேஷ் நடராஜன் இதுபோல ஐடி துறையில் பல முக்கிய பொறுப்புகளில் தமிழர்கள் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா?

தமிழர்கள் என்று சொல்ல முடியாது. மொத்த தென் இந்தியாவே கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இடம் என்பதால், தென் இந்தியர்கள் உலகம் முழுவதும் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஆரம்ப கட்டத்தில் இந்த துறை தலைவர்கள் தென் இந்தியர்களாக இருந்தார்கள். இன்போசிஸ் நிறுவனத்தில் இருப்பர்வர்கள் தென் இந்தியர்கள். அவர்கள் பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்பட்டார்கள். விப்ரோவும் பெங்களூருக்கு வந்தது. டிசிஎஸ் மும்பை, டெல்லிக்கு அடுத்து சென்னையில் பெரிய அளவில் செயல்பட தொடங்கியது. கல்வி, சூழ்நிலை மற்றும் ஆரம்பகட்ட தலைவர்கள் காரணமாக தென் இந்தியர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் பெங்காலிகள் மற்றும் மராத்தியர்களும் இருக்கிறார்கள்.

சிஎப்ஓ-வுக்கு அடுத்து சிஇஒ தானே? அது ஏன் நடக்கவில்லை?

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் சிஇஓ ஆவதற்கு வாய்ப்பு கிடைக்காது, கொடுக்கவும் முடியாது. டிசிஎஸ்-ல் 1968-ம் ஆண்டு கோலி பொறுப்பேற்றார். அதன் பிறகு 1996-ம் ஆண்டு வரைக்கும் அவர்தான் தலைவராக இருந்தார். ராம துரை 96 முதல் 2009 வரை பொறுப்பு வகித்தார். 2012-ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். நீண்ட காலம் தலைவர் தேவை என்று நிறுவனம் நினைத்திருக்கலாம். நிறுவனத்துக்கு என்ன தேவையோ அதை நிறுவனம் செயல்படுத்தி இருக்கலாம்.

இப்போது என்ன செய்கிறீர்கள்?

இந்திய அரசின் வரி சீரமைப்பு கமிட்டியின் உறுப்பினராக இருக்கிறேன். சிட்டி யூனியன் வங்கி, தேசிய திறன் மேம்பாட்டு கழகம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இயக்குநர் குழுவில் இருக்கிறேன். டிரஸ்ட் மூலமாக மருத்துவமனை கட்டி வருகிறோம். கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியாவில் சில வேலைகள் என்று செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கிறது.

ஓய்வு பெற்ற அதிகாரிகள் புத்தகம் எழுதுவார்களே? உங்களுக்கு அந்த எண்ணம் இருக்கிறதா?

ஆமாம் புத்தகம் எழுதப்போகிறேன். வாழ்க்கை வரலாறு, போதுமான மேனேஜ்மெண்ட் புத்தகங்கள் கிடையாது. சில திட்டங்கள் வெற்றி அடைகின்றன. சில தோல்வி அடைகின்றன. டிசைன் மட்டுமே ஜெயிப்பதற்கு காரணம் கிடையாது. ஒரு திட்டத்தில் அனைவரும் ஒன்றாக ஒரு நோக்கத்துக்காக வேலை செய்வார்கள். சில இடத்துக்கு போகும்போது ஏனோதானோ என்று வேலை செய்வார்கள். பல புராஜெக்ட்களை பார்த்திருப்பதால் அதைப்பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்.

உங்களிடம் பணமும் இருக்கிறது. இந்தத் துறை பற்றிய அறிவும் இருக்கிறது. வென்ச்சர் கேபிடல் ஆரம்பித்து ஏன் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க கூடாது.?

42 ஆண்டு கால கார்ப்பரேட் வாழ்க்கைக்குப் பிறகு வென்ச்சர் கேபிடல் நிறுவனம் ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை. ஆனால் என்னை தெரிந்த சிலருக்கு மென்ட்டாராக இருக்கிறேன்.

உங்கள் அனுபவம் மூலம் இளைஞர்களுக்கு சொல்ல விரும்புவது?

இரண்டு விஷயங்கள். முதலாது தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அக்கவுண்டிங் முடித்து கோடிங் எழுதும்போது, நேரத்தை வீண் செய்வதாக பலர் விமர்சித்தார்கள். ஆனால் அப்போது கற்றுக்கொண்டதால்தான் சிஎப்ஓ ஆக முடிந்தது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதில் ஆர்வமும் ஈடுபாடும் முக்கியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x