Published : 29 Jul 2014 10:00 AM
Last Updated : 29 Jul 2014 10:00 AM

டீசல் மீது கூடுதல் வரி விதிப்பு: மாநில அரசுகளுடன் பேச்சு நடத்த முடிவு - பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு

டீசல் மீது விதிக்கப்படும் கூடுதல் வரி விதிப்பைக் குறைப்பது குறித்து மாநில அரசுகளுடன் பேச்சு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு நிர்ணயிக்கும் டீசல் விலையுடன் மாநில அரசுகள் விதிக்கும் வரிகளால் லிட்டருக்கு ரூ. 7 வரை உயர்ந்துள்ளது. இந்த வரி விதிப்பை மாநில அரசுகள் கைவிடுவது தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 12 மாநிலங்களில் அதிக அளவு வரி விதிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சகம் கடந்த 9-ம் தேதி மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளாக அமைச்சக உயர் அதிகாரி தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பதன் அவசியத்தை ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அசாம், பிஹார், ஹரியாணா, கர்நாடகம், உத்தராகண்ட் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வரி விதிப்பு அதிகாரிகளுடனான ஆலோ சனைக் கூட்டம் டெல்லியில் இம்மாதம் 30 மற்றும் 31-ம் தேதி நடைபெற உள்ளது. அடுத்த கட்டமாக மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் 5 மற்றும் 6- தேதிகளில் நடைபெற உள்ளது.

மாநில அரசு விதிக்கும் பல முனை வரி விதிப்பால் பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடுகிறது. மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 4 அதிகமாகவும் சில இடங்களில் ரூ. 7 அதிகமாகவும் உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 62.64 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 61.70 ஆக உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் ரூ. 63.94 ஆகவும். உத்தராகண்ட் மாநிலத்தில் ரூ. 62.21 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் ரூ. 63.25 ஆகவும், கர்நாடக மாநிலத்தில் ரூ. 62.85 ஆகவும், ஆந்திர மாநிலத்தில் ரூ. 63.04 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 73.54 ஆகவும், மும்பையில் ரூ. 81.68 ஆகவும், மகாராஷ்டிரத்தின் பிற பகுதிகளில் ரூ. 82.16 ஆகவும் உள்ளது. மாநிலங்களில் அதிக வரி விதிக்கப்படுவதால், அம்மாநி லத்தில் விற்பனையாக வேண்டிய எரிபொருள் அளவு பிற மாநிலங் களுக்குச் செல்வது தெரிய வந்துள்ளதாக பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் தெரிவித் தனர்.

கூடுதல் வரி விதிப்பை மாநில அரசுகள் கைவிட்டால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாகக் குறையும். இதன் பலனை பொதுமக்களும் பெறுவர் என்று தெரிவித்தனர். நுகர்வோரை அடிப்படையாகக் கொண்ட கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்பதில் மோடி அரசு தீவிரமாக உள்ளது. அந்த அடிப்படையில் இந்த ஆலோ சனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x