இந்தியாவில் பண பரிவர்த்தனைக்காக அறிமுகம் செய்யப்பட்ட ‘யுபிஐ’ முறையை பின்பற்ற 40 நாடுகள் ஆர்வம்

இந்தியாவில் பண பரிவர்த்தனைக்காக அறிமுகம் செய்யப்பட்ட ‘யுபிஐ’ முறையை பின்பற்ற 40 நாடுகள் ஆர்வம்
Updated on
2 min read

சென்னை: இந்தியாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள ‘யுபிஐ’பண பரிவர்த்தனை சேவையை தங்கள் நாடுகளிலும் பின்பற்ற 40-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்வமாக உள்ளன. இதுதொடர்பாக இந்தியாவுடன் அந்நாடுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

வங்கி பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள வசதியாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதற்கான தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றுதான் ‘யுபிஐ’ எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI - Unified Payments Interface) ஆகும்.

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் லாப நோக்கமற்ற நிறுவனமான இந்திய தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் (NPCI) நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட மின்னணு பண பரிவர்த்தனை சேவை கட்டண முறைதான் யுபிஐ.

இரு வங்கி கணக்குகள் இடையே உடனடியாக பண பரிவர்த்தனையை யுபிஐ அனுமதிக்கிறது. இதன் மூலம் உடனடி பண பரிவர்த்தனைகளை 24 மணி நேரமும் செய்ய முடியும். வங்கி கணக்கு விவரங்களை நிரப்ப வேண்டிய அவசியமின்றி, ஆதார் எண், செல்போன் எண், வாடிக்கையாளரின் இ-மெயில் முகவரி மூலம் ஒரு ஸ்மார்ட்போனில் பணத்தை அனுப்பவோ, பெறவோ அனுமதிக்கிறது.

தற்போது நடைபாதை கடை முதல் ஷாப்பிங் மால்கள் வரை யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை நடைபெறுகிறது. தற்போது, நாடு முழுவதும் 10 கோடி பேர் யுபிஐ தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

யுபிஐ சேவை முறை கடந்த 2016 ஏப்.11-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டான 2017-ல் மேற்கொள்ளப்பட்ட யுபிஐ பண பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 9.36 மில்லியனாக இருந்தது. நடப்பு ஆண்டில் இது 9,415 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய 40-க்கும் மேற்பட்ட நாடுகள் தீர்மானித்துள்ளன. இதுகுறித்து கேட்டபோது, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:

இரு நபர்களுக்கு இடையே விரைவாக, எளிதாக, பாதுகாப்பாக, மின்னணு முறையில் பணம் அனுப்புவதற்காக யுபிஐ உருவாக்கப்பட்டது. யுபிஐ மூலம் கடந்த மே மாதம் வரை ரூ.14.89 லட்சம் கோடி அளவுக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் யுபிஐ பிரபலம் அடைந்துள்ளதோடு, நம்பிக்கையையும் பெற்றுள்ளது.

யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்வதை உலக நாடுகளும் தற்போது பின்பற்ற தொடங்கியுள்ளன. குறிப்பாக, சிங்கப்பூர், ஓமன், சவுதி அரேபியா, மலேசியா, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் யுபிஐ முறையை தங்கள் நாடுகளில் அறிமுகம் செய்து உள்ளன.

சமீபத்தில் ஜப்பான் நாட்டின் மின்னணு துறை அமைச்சர் கோனோடாரோ, டெல்லிக்கு வந்தபோது, அங்குள்ள காபி ஷாப்புக்கு சென்றுள்ளார். அங்கு வந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் மின்னணு முறையில் பணம் செலுத்தியதை கண்டு ஆச்சரியப்பட்டார். ஜப்பான் திரும்பிய அவர் உடனடியாக தங்கள் நாட்டிலும் யுபிஐ பணபரிவர்த்தனை முறையை செயல்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இங்கிலாந்து, ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், பூடான், நேபாளம், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, தென்கொரியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் யுபிஐ மின்னணு பணப் பரிவர்த்தனை சேவையை தங்கள் நாடுகளில் செயல்படுத்த ஆர்வம் காட்டுகின்றன. இதற்காக, இந்தியாவுடன் அந்நாடுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in