ஒரு செட் இட்லி, வடை ரூ.200 - கோவை விமான நிலைய உணவகங்களில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை
கோவை: கோவை விமான நிலையத்தில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. தினமும் 25-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன.
பயணிகள் நலனுக்காக விமான நிலைய வளாகத்தில் பல்வேறு இடங்களில் உணவகங்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை கடைகள் செயல்படுகின்றன. இத்தகைய உணவகங்களில் உணவு பொருட்கள் விலை அதிகமாக உள்ளதாகவும், அவற்றை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது: தொழில், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்காக பலர் விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர். முன்பு செல்வந்தர்கள் மட்டுமே விமானத்தில் பயணம் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் விமான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
விமான நிலைய வளாகத்தில் செயல்படும் உணவகங்களில் இரண்டு இட்லி மற்றும் ஒரு வடை ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் இட்லி ஒன்று ரூ.90, ஒரு செட் இட்லி மட்டும் ரூ.120, பரோட்டா குருமா ரூ.200, சப்பாத்தி ஒரு செட் ரூ.200, ஆனியன் ரோஸ்ட் ரூ.220 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
வளாகத்தின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் ஒரு தோசை ரூ.150, மசால் தோசை ரூ.170, இட்லி, வடை ரூ.140, மினி சாம்பார் இட்லி ரூ.150, பொங்கல் ரூ.140, பூரி மசால் ரூ.150, வடை (இரண்டு) ரூ.90 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
காலை 8 மணி விமானத்தில் பயணிக்க வேண்டுமெனில் 5 மணிக்கெல்லாம் புறப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு முன் விமான நிலையத்துக்குள் செல்ல வேண்டும். அவசரமாக புறப்படும்போது விமான நிலையத்தில் உணவு உட்கொண்டு கொள்ளலாம் என்றே பலர் எண்ணுவார்கள். பயணிகள் உள்ளே உள்ள உணவகங்களில் அதிக விலையால் பாதிக்கப்படும் நிலையில், வழியனுப்ப வரும் நண்பர்கள், உறவினர்கள் வெளிப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள உணவகங்களில் இதே பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது ஏற்புடையதல்ல.
கோவை விமான நிலையம் இரண்டாம் நிலை நகரங்களில் செயல்படும் விமான நிலையம். எனவே, இங்கு தினமும் இயக்கப்படும் விமானங்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அதற்கேற்ப நியாயமான விலையில் உணவு பொருட்களை விற்பனை செய்ய விமான நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பயணிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, விமான நிலையத்தின் இயக்குநர் செந்தில்வளவனிடம் கேட்டபோது, ‘‘சென்னை, பெங்களூரு உள்ளிட்ட மற்ற விமான நிலையங்களை ஒப்பிடுகையில் கோவை விமான நிலையத்தில் உணவு பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து புள்ளி விவரங்களுடன் விரைவில் தகவல் தெரிவிக்கப்படும்’’என்றார்.
