Published : 10 Jun 2023 06:18 AM
Last Updated : 10 Jun 2023 06:18 AM
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில், ஓரண்டாக 500 மெட்ரிக் டன் அளவுக்கு முலாம்பழம் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது, என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் காய்கறிகள், பழங்கள் முதன்மை பதப்படுத்தும் நிலையம் செயல்படுகிறது.
இங்கு ஆட்சியர் கே.எம்.சரயு ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் கூறியதாவது: போச்சம்பள்ளி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் துரித உறைநிலை கூடம், கொதிநீர் மற்றும் நீராவி கொண்டு பதப்படுத்தும் தொழில்நுட்ப அறை, கதிரியக்கத்தின் மூலம் பதப்படுத்தும் அறை, பழுக்க வைக்கும் அறை, குளிர்பதனக் கிடங்கு, தரம் பிரிக்கும் அறை, எடை மேடை ஆகியவை பயன்பாட்டில் உள்ளன. முதன்மை பதப்படுத்தும் நிலையம் மற்றும் துரித உறை நிலைக் கூடம் ஆகியவை மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் மதிப்பு கூட்டி பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஏற்கெனவே தேங்காய் நாளொன்றுக்கு 6 முதல் 7 மெட்ரிக் டன் வீதம் மதிப்பு கூட்டி பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மேலும், மாங்காய் நாளொன்றுக்கு 10-15 டன் அளவிற்கு பதப்படுத்தப்பட்டு (மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் உறைவெப்பநிலை) ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதேபோல கடந்த ஓராண்டாக 500 மெட்ரிக் டன் அளவிற்கு முலாம்பழம் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கதிர்வீச்சு முறை பதப்படுத்துதல் நிலையமானது தற்போது நறுமணப் பொருட்களை பதப்படுத்துவதற்கான உரிமம் பெற்று செயல்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. இதன்மூலம் போச்சம்பள்ளியை சுற்றியுள்ள அனைத்து விவசாயிகள், தொழில்முனைவோர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயன்பெற்று வருகின்றனர். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
ஆய்வின்போது வேளாண்மை வணிகத்துறை துணை இயக்குநர் காளிமுத்து, வேளாண்மை அலுவலர் மும்மூர்த்தி சோழன், உதவி வேளாண்மை அலுவலர் குமார், முதன்மை பதப்படுத்தும் மையத்தின் பொறுப்பு அலுவலர் ஜீவானந்தன், கதிரியக்கப் பாதுகாப்பு அலுவலர் சிவந்தன், வட்டாட்சியர் தேன்மொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT