27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ‘மிஸ் வேர்ல்டு' போட்டி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: இங்கிலாந்தைச் சேர்ந்த எரிக் மோர்லே என்பவர் கடந்த 1951-ம் ஆண்டில் ‘மிஸ் வேர்ல்டு' போட்டியை தொடங்கினார். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் இந்த உலக அழகிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 1996-ம் ஆண்டில் ‘மிஸ்வேர்ல்டு' போட்டி இந்தியாவில் நடைபெற்றது. இந்த சூழலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மிஸ் வேர்ல்டு 2023' அழகிப் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ‘மிஸ் வேர்ல்டு' அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லே கூறும்போது, “வரும் நவம்பர், டிசம்பரில் இந்தியாவில் ‘மிஸ் வேர்ல்டு 2023' உலக அழகிப் போட்டி நடத்தப்படும். இது 71-வது 'மிஸ் வேர்ல்டு' போட்டியாகும். உலகம் முழுவதும் இருந்து 130 நாடுகளை சேர்ந்த பெண்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். அழகு, பன்முகத்தன்மை, பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த போட்டி இருக்கும்" என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ‘மிஸ் வேர்ல்டு' பட்டத்தை வென்ற போலந்தை சேர்ந்த கரோலினா கூறும்போது, “இந்தியாவுக்கு வரும்போது வேறு நாட்டுக்கு செல்வது போன்ற உணர்வு ஏற்படுவது இல்லை. இந்தியாவை எனது சொந்த நாடாகவே கருதுகிறேன். ஒரு மாதம் ‘மிஸ் வேர்ல்டு 2023' போட்டிகள் நடைபெறும். இதன் மூலம் இந்திய குடும்பங்களின் பாரம்பரியம், இந்தியர்களின் அன்பு, மரியாதை, விருந்தோம்பல் நடைமுறைகள் உலகம் முழுவதும் சென்றடையும்" என்று தெரிவித்தார்.

ரீட்டா, ஐஸ்வர்யா ராய், டயானா ஹெய்டன், யுக்தா முகி, பிரியங்கா சோப்ரா, மனுஷி சில்லார் ஆகிய 6 இந்திய பெண்கள் ‘மிஸ் வேர்ல்டு' பட்டத்தை வென்றுள்ளனர். இந்த ஆண்டு போட்டியில் ‘மிஸ் இந்தியா' பட்டத்தை வென்ற சினி ஷெட்டி இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார். அவர் கூறும்போது, “உலகம் முழுவதும் இருந்து எனது சகோதரிகள் ‘மிஸ் வேர்ல்டு 2023' போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்தியாவின் பன்முகத்தன்மையை அவர்கள் புரிந்து கொள்வார்கள். போட்டியில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in