Published : 09 Jun 2023 04:00 AM
Last Updated : 09 Jun 2023 04:00 AM

உணவு தரத்தை உறுதிப்படுத்துவதில் கோவை மாவட்டம் முதலிடம்: தேசிய அளவில் 200-க்கு 196 மதிப்பெண்கள்

தேசிய அளவிலான ‘ஈட் ரைட் சேலஞ்ச்-பேஸ் 2’ போட்டியில் முதலிடம் பிடித்ததற்கான சான்றிதழை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியாவிடம் இருந்து பெற்ற மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கு.தமிழ்செல்வன்.

கோவை: தேசிய அளவிலான உணவு தரத்தை உறுதிப்படுத்துவதற்கான போட்டியில் 200-க்கு 196 மதிப்பெண்கள் பெற்று கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சார்பில் தேசிய அளவில் உணவு தரத்தை உறுதிப்படுத்துவதற்கான ‘ஈட் ரைட் சேலஞ்ச்-பேஸ் 2’ எனும் போட்டி மாவட்டங்களுக்கிடையே கடந்த 2022 மே முதல் நவம்பர் வரை நடத்தப்பட்டது. இதில், தேசிய அளவில் 231 மாவட்டங்கள் பதிவு செய்து கலந்துகொண்டன.

பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்தல், சரியான உணவு பழக்கவழக்கங்களை பொது மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் போட்டி நடைபெற்றது.

உணவு வணிக நிறுவனங்களின் உரிமம் பெறுதல், தொடர் கண்காணிப்பு, உணவு மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்தல், விதிமுறைகளை பின்பற்றுதல், உணவு வணிக நிறுவனங்கள் வருடாந்திர கொள்முதல் விவரத்தை இணையத்தில் தாக்கல் செய்தல், இணைய வழியாக வரும் புகார்களை உடனுக்குடன் ஆய்வு செய்தல்,

உணவு வணிகர்களுக்கான பயிற்சி வழங்குதல், பொது இடங்களில் உணவு பாதுகாப்பு குறித்த விளம்பரம், சமூக வலைதளங்களில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, சிறு தானிய உணவுகள் தொடர்பான விளக்கம், செறிவூட்டப்பட்ட உணவுகள் குறித்த விளக்கங்கள் என பல்வேறு குறியீடுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் தீர்மானிக்கப்பட்டன.

இதில் சிறந்து விளங்கும் மாவட்டங்களுக்கு தேசிய அளவில் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. கோவை மாவட்டம் 200-க்கு 196 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதல் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியா இதற்கான சான்றிதழை கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கு.தமிழ் செல்வனிடம் வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x