சூரிய மின்சக்தி திட்டத்துக்கு ரூ. 500 கோடி

சூரிய மின்சக்தி திட்டத்துக்கு ரூ. 500 கோடி
Updated on
1 min read

சூரிய மின்னாற்றல் திட்டங்களுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். தமிழ்நாடு, ராஜஸ்தான், லடாக் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சூரிய மின்திட்டங்ளுக்காக இந்த நிதி ஒதுக்கப்படுவதாக அவர் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.

இந்த நிதி இந்திய சூரிய ஆற்றல் நிறுவனம் மூலமாக மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். சூரிய மின் பலகைகள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. சூரிய ஆற்றலை மின்சாரமாக்குவதற்கான கியர் தயாரிப்பாளர்களுக்கு குறைந்த வரி விதிக்கப்படும். இதன் மூலம் சூரிய மின்னாற்றல் உற்பத்தியில் பலரும் ஈடுபடுவர்.

இதன் மூலம் அரசின் இலக்கான ஒரு லட்சம் சூரிய ஆற்றல் நீர்ப் பாசன பம்புகளை உருவாக்கும் இலக்கை எட்ட முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். இதேபோல காற்றாலை மின்னுற்பத்திக்குத் தேவைப்படும் டர்பைன்கள் மீதான சுங்க வரி 5 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சூரிய மின்னாற்றல் உதிரிபாக தயாரிப்பாளர்கள் இறக்குமதி சூரிய பலகைகள் மீது கூடுதல் வரி விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் இதற்கான கருவிகள் தயாரிப்போர் இனி குறைவான வரி செலுத்தும் வகையில் வரி விதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் விவசாய நிலங்களுக்கு சப்ளை செய்யப்படும் மின்சாரம் மீதான மானிய சுமையைக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. மொத்த மின்னுற்பத்தியில் 23 சதவீதம் வேளாண் துறைக்கு சப்ளை செய்யப்பட்டாலும் வருமானம் 7 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது.

குஜராத் மாநிலத்தில் நர்மதா பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளதைப் போன்ற சூரிய மின்னாற்றல் பண்ணை அமைக்க மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக ரூ. 100 கோடியை ஜேட்லி தனது பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளார். 2022-ம் ஆண்டு 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை மேலும் அதிகரிக்கவும் மோடி தலைமையிலான அரசு விரும்புகிறது. இந்த இலக்கை எட்டுவதற்கு உள்நாட்டில் சூரிய மின்னாற்றலுக்குத் தேவையான கருவிகள் தயாரிப்போரை ஊக்குவிக்கவும், இந்த பணிகளை மேற்கொள்வதில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும் அரசு தீவிர கவனம் செலுத்த உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in