Published : 19 Jul 2014 10:00 AM
Last Updated : 19 Jul 2014 10:00 AM

முன் தேதியிட்டு வரி விதிப்பது இனி இருக்காது: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உறுதி

முன்தேதியிட்டு வரி விதிக்கும் முறை இனி இந்தியாவில் இருக்காது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உறுதிபட தெரிவித்தார். வரி விதிப்பு தொடர்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நடப்பு நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மீதான உரைக்கு மக்களவையில் வெள்ளிக்கிழமை பதிலளித்து பேசிய ஜேட்லி, முன் தேதியிட்டு வரி விதிக்கும் முறை இனி இருக்காது, புதிதாக வரி விதிக்கும் முறைதான் இருக்கும் என்று கூறினார்.

முன் தேதியிட்டு வரி விதிக்கும் முறையை முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் கொண்டு வந்தது என்றும் அவர் குற்றம் சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்த தவறுகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றார். 2012-ம் ஆண்டு மூலதனம் மீதான ஆதாயத்துக்கு வரி விதிக்கும் முறையை காங்கிரஸ் அரசு கொண்டு வந்ததோடு அதை 2007-ம் ஆண்டு முன் தேதியிட்டு வசூலிக்கப்படும் என்று அறிவித்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

முன் தேதியிட்டு வரி விதிக்கும் முறையால் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி ஏற்பட் டுள்ளது என்று கூறிய ஜேட்லி, அந்நிய முதலீட்டாளர்கள் குறிப்பாக பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வோட போன் நிறுவன விவகாரம் முன் தேதியிட்டு வரி வசூலிப்பால் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

முன் தேதியிட்டு வரி வசூலிப்பது தொடர்பாக சட்டம் இயற்றுவது இந்திய இறையாண்மையாகும். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. இருப்பினும் இதை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். இதனால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி ஆராய வேண்டும். அத்துடன் முதலீட்டு சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

தனது இரண்டரை மணி நேர பதிலுரையில், இந்த அரசு முன் தேதியிட்டு வரி விதிக்கும் முறையை சாதாரணமாக அமல்படுத்தாது என்று குறிப்பிட்டார். வருமான வரிச் சட்டம் 1961-ல் திருத்தம் செய்து 2012-ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தில் முன் தேதியிட்டு வரி வசூலிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றார்.இந்த தருணத்தில் முதலீட்டாளர்களுக்கு இந்த மாமன்றத்தின் வாயிலாக அளிக்கும் உறுதிமொழி என்ன வென்றால், இந்த அரசு ஸ்திரமான வரி விதிப்புக் கொள்கையை மேற்கொண்டு வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் என்றார்.

முன் தேதியிட்டு வரி விதிப்பது தொடர்பாக புதிய வழக்குகள் அனைத்தையும் மறைமுக வரி விதிப்பு மதிப்பீட்டு அதிகாரியை உள்ளடக்கிய உயர் நிலை குழு நடவடிக்கை எடுப்பதற்கு முன் பரிசீலிக்கும் என்றார்.

வோடபோன் நிறுவனம் 2007-ம் ஆண்டு ஹட்சிசன் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து அதற்கு ரூ. 20 ஆயிரம் கோடி முன் தேதியிட்டு வரி விதிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இந்நிறுவனம் சர்வதேச தீர்ப்பாயத்திடம் முறையிட்டுள்ளது.

மூன்று துறைகளுக்கு கூடுதல் நிதி

மத்திய பட்ஜெட்டில் உணவு பதப்படுத்துதல், காற்றாலை மின்னுற்பத்தி, சுகாதாரத் துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாக ஜேட்லி அறிவித்தார். உணவு பதப்படுத்தல் துறைக்கு ரூ. 2,000 கோடி தொகை ஒதுக்கப் படுகிறது. இத்தொகை நபார்டு வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார்.

காற்றாலை மின்னுற்பத்தியை ஊக்குவிக்க தொடர் தேய்மான திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் போதைப் பழக்கத்தைத் தடுக்க கூடுதலாக ரூ. 50 கோடி ஒதுக்குவதாகவும் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x