

தொடர்ந்து 6 நாள்களாக ஏற்றம் பெற்று வந்த பங்குச் சந்தை வியாழக்கிழமை லேசான சரிவைச் சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் முடிவில் 42 புள்ளிகள் சரிந்ததில் 22509 புள்ளியில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை 16 புள்ளி சரிந்து குறியீட்டெண் 6736 புள்ளிகளானது.
முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 17 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்த. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், பிஹெச்இஎல் ஆகிய நிறுவனப் பங்குகளும் சரிவிலிருந்து தப்பவில்லை.
அதேசமயம் இன்ஃபோசிஸ், சிப்லா, டாக்டர் ரெட்டீஸ் லேப், ஹிந்துஸ்தான் யூனிலீவர், மாருதி சுஸுகி, சன் பார்மா, ஸ்டெர்லைட் ஆகிய நிறுவனப் பங்கு விலைகள் உயர்ந்ததால் பெருமளவு சரிவு தவிர்க்கப்பட்டது.
மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவனப் பங்குகள் 97.48 புள்ளிகளும், உலோக பங்குகள் 35.42 புள்ளிகளும், எப்எம்சிஜி பங்குகள் 30.20 புள்ளிகளும் உயர்ந்தன. ஹிந்துஸ்தான் யூனி லீவர் பங்கு 1.89 சதவீதம் உயர்ந்து ரூ. 606.90-க்கும், சிப்லா பங்குகள் 1.65 சதவீதம் உயர்ந்து ரூ. 396.25-க்கும், டாக்டர் ரெட்டீஸ் பங்குகள் 1.50 சதவீதம் உயர்ந்து ரூ. 2,663.15-க்கும், ஹெச்டிஎப்சி பங்குகள் 0.70 சதவீதம் உயர்ந்து ரூ. 903.55-க்கும், ஹின்டால்கோ பங்குகள் 0.70 சதவீதம் உயர்ந்து ரூ. 137.05-க்கும் விற்பனையாயின.
பிஹெச்இஎல் பங்கு அதிகபட்சமாக 3.20 சதவீதம் சரிந்து ரூ. 187.60-க்கும், கெயில் இந்தியா 2.23 சதவீதம் சரிந்து ரூ. 368-க்கும், கோல் இந்தியா 2.21 சதவீதம் சரிந்து ரூ. 280.85-க்கும், எஸ்பிஐ 1.97 சதவீ தம் சரிந்து ரூ. 1,895.35-க்கும், ஆக்ஸிஸ் வங்கி 1.96 சதவீதம் சரிந்து ரூ. 1,437.25-க்கும் விற்பனையாயின.
ஆசிய பிராந்தியத்தில் ஜப்பான் பங்குச் சந்தையான நிகெகி 0.84 சதவீதமும், ஹாங்காங்கின் ஹாங்சென் பங்குச் சந்தை 0.18 சதவீதமும் உயர்ந்தன. சீனாவின் ஷாங்காய் பங்கு சந்தை 0.74 சதவீதம் சரிந்தது. ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது.