Published : 05 Jun 2023 06:08 AM
Last Updated : 05 Jun 2023 06:08 AM
மதுரை: ஒரு முருங்கைக்காய் விலை மதுரையில் ரூ.25-க்கு விற்பனையானது. தென் மாவட்டங்களில் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட், பறவை மார்க்கெட் போன்றவை முக்கியமானவை. மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து மட்டுமில்லாது கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.
கடந்த சில வாரமாக காய்கறிகள் விலை கட்டுக்குள் இருந்தநிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.50 முதல் ரூ.60, பாகற்காய் ரூ.50 முதல் ரூ. 60, பீன்ஸ் ரூ.60, அவரை ரூ.80 முதல் ரூ.90, சின்ன வெங்காயம் ரூ.75, தக்காளி ரூ.15 முதல் ரூ.30, கேரட் ரூ.40, பட்டர் பீன்ஸ் ரூ.100 முதல் ரூ.110, பீட்ரூட் ரூ.40, சிறிய பாகற்காய் ரூ.150 போன்ற விலையில் விற்கிறது.
சில்லறை விற்பனை கிடையில் இந்த விலையில் 50 சதவீதம் அதிகம். இதில், முருங்கைக்காய் விலை கிலோ ரூ.120-க்கு விற்கிறது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முருங்கைக்காய் ரூ.20 முதல் ரூ. 25-க்கு விற்கிறது. கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.80-க்கு விற்ற நிலையில் தற்போது திடீரென விலை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து முருங்கைக்காய் வியாபாரிகள் கூறுகையில், ‘‘கடந்த மார்ச்சில் தொடங்கிய முருங்கைக்காய் சீசன் தற்போது முடியப் போகிறது. அதனால், மகசூல் குறைந்துள்ளது. மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு தேனி, திண்டுக்கல், உடன்குடி, ஆண்டிப்பட்டி, திசையன் விளை, விளாத்திகுளம், ஒட்டன்சத்திரம், உசிலம்பட்டி, வலையப்பட்டி போன்ற இடங்களில் இருந்தும் முருங்கை விற்பனைக்கு வருகிறது.
தற்போது கோடை வெயிலும், மழையும் மாறி மாறி பெய்ததால் சீசன் முடியும் தருவாயில் முருங்கைக்காய் வரத்து அடியோடு குறைந்து விட்டது. அதனால், விலை உயர்ந்துள்ளது. விலை இன்னும் அதிகரிக்கலாம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT