

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடைத் தொழில் நாளுக்குநாள் பல்வேறு காரணங்களால் வளர்ச்சிக்கு பதிலாக வீழ்ச்சியை நோக்கி செல்வதாக தொழில் துறையினர் கருதுகின்றனர். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, கரோனா தொற்று, உலக நாடுகளிடையே போர், வாங்கும் திறன் குறைந்தது என பல்வேறு காரணங்களால் இன்றைக்கு திருப்பூர் பின்னலாடைத் தொழில் தத்தளிக்கிறது.
திருப்பூர் தொழில்துறையினர் கூறும்போது,“கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு தற்போது திருப்பூர் மோசமான நிலைக்குசென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதலபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கின்றன. 90 சதவீதம்சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பாதிப்பு என்பது நிச்சயம் பின்னலாடைத் தொழிலும் அதனை சார்ந்துள்ள தொழிலாளர்களிடமும் எதிரொலிக்கும்” என்றனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: ஜவுளித்தொழிலின் முதுகெலும்பு, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தான். உலக மக்கள் தொகை 620 கோடியாக இருக்கும் நிலையில், உலகின் ஏதாவது ஒரு சின்னநாட்டில் பொருளாதார பாதிப்பு என்றாலும், அந்த நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் திருப்பூர் தொழிலுக்கு பாதிப்பு உண்டு. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மேம்படுத்தினாலே தமிழகத்தில்திருப்பூர் போல 10 தொழில் மாநகரங் களை உருவாக்கலாம்.
வங்கிகளில் கடன் பெற்றவர்கள் தங்களது கடனை செலுத்த முடியாமல், சொத்தை விற்கும் நிலையை திருப்பூரில் பார்க்கிறோம். தொழில் தேவைக்கு ஏற்ப வங்கிகள் கட்டுப்பாடுகள் இன்றி கடன் கொடுத்தால் அவர்கள் மீள வழி உண்டு. திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் தொழில் நடந்த கட்டிடங்கள் எல்லாம் காலியாகி இன்றைக்கு வாடகைக்கு விடப்படும் சூழல் நிலவுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 40 சதவீதம் நிறுவனங்கள் இந்த தொழிலில் இருந்து வெளியேறிவிட்டன.
எங்கள் அமைப்பில் 1,600 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இன்றைக்கு வெறும் 650 பேர்தான் உள்ளோம். இவையெல்லாம் தொழில் வீழ்ச்சியின் அறிகுறிகள் தான். மத்தியில் ஜவுளித்துறை அமைச்சருக்கு பல்வேறு பொறுப்புகளில் ஒன்றாகத்தான் இத்துறை உள்ளது. நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பை தரும் ஜவுளித்தொழிலுக்கு தனி அமைச்சரை ஒதுக்கினால், இந்த தொழில் வளம் பெறும்.
இன்று உலக ஏற்றுமதியில் சீனா 30 சதவீதம் ஏற்றுமதி செய்கிறது. வங்கதேசம் 12 சதவீதமும், இலங்கை 4 சதவீதமும் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளன. 3.8 சதவீத ஏற்றுமதியுடன் இந்தியா 6-ம்இடத்தை பெற்றிருப்பது வெட்கக்கேடு. மனித வளம், தேவையான அனைத்து வசதிகளும் இங்குள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் உற்று நோக்கி தொழிலை மேம்படுத்த வேண்டும்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று, 50 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்.ஆனால் இங்கு வெளியேறிய 40 சதவீதம் நிறுவனங்கள் மீண்டும் தொழிலுக்கு வந்தாலே லட்சக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும். தொழில் துறையினரின் தேவைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மத்திய, மாநில அரசுகளிடம் பேசி, தேவையானதை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.