

புதுடெல்லி: தனியார் ஊடகம் சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வேளாண் துறையின் பங்கு இப்போது 12% ஆக உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட பொருளாதார இலக்கை எட்ட ஜிடிபியில் வேளாண் துறை பங்கை இரட்டிப்பாக்க (24%) வேண்டும்.
நாட்டு மக்களில் 65% பேர் வேளாண் துறையை நம்பி உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான மத்திய அரசு வேளாண் துறை மற்றும் ஊரக மேம்பாட்டுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. இதன் காரணமாகஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என நம்புகிறோம். பணிகளை செய்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். எதிர்காலத்தைப் பற்றி அவ்வளவாக கவலைப்படுவதில்லை.
வளர்ச்சி திட்டங்களின் செயல்பாட்டைப் பொருத்தவரை, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என பாகுபாடு பார்ப்பதில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் சமமான முன்னுரிமை வழங்குகிறோம்.
எத்தனால் எரிபொருள்
விவசாயிகள் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களாக மட்டும் இல்லாமல் அவர்களை எரிசக்தியை உருவாக்குபவர்களாகவும் மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எத்தனாலை வாகன எரிபொருளாக பயன்படுத்த வேண்டும் என்ற அரசின் திட்டம் நிறைவேறப் போகிறது.
எத்தனால், மெத்தனால் அல்லது மின்சாரத்தில் இயங்கும் கட்டுமான இயந்திரங்களை வாங்குவோருக்கு வட்டி மானியம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.65 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நெடுஞ்சாலை திட்டப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் 90% நிறைவடையும் என அரசு எதிர்பார்க்கிறது. டெல்லி மிகவும் மாசடைந்த நகரமாக உள்ளது.
எனவே, டெல்லியை காற்று, தண்ணீர், மற்றும் ஒலி மாசுவிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.