முதல்வர் ரங்கசாமி, நடிகர் விஜய் சந்திப்பு; அதிமுக ஊகங்களுக்கு பதிலளிக்க முடியாது: அமைச்சர் நமச்சிவாயம்

சென்னையில் நடிகர் விஜயை புதுவை முதல்வர் ரங்கசாமி சந்தித்த போது எடுக்கப்பட்ட படம்
சென்னையில் நடிகர் விஜயை புதுவை முதல்வர் ரங்கசாமி சந்தித்த போது எடுக்கப்பட்ட படம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நடிகர் விஜய்யை அரசியல் ரீதியாக சந்தித்தாரா என்ற அதிமுகவின் ஊகங்களுக்கு பதில் தர முடியாது என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சென்னை சென்று நடிகர் விஜயை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இது வழக்கமான சந்திப்பு என்று முதல்வர் குறிப்பிட்டார்.

ஆனால் தேர்தலில் வென்ற பிறகு பிரதமர் மோடி, அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் ஆகியோரை சந்திக்காமல் முதல்வர் ரங்கசாமி தவிர்த்து வருவது தொடர்வதால் ஆளுங்கட்சிக் கூட்டணியில் குழப்பத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சந்திப்பு பற்றி விஜய் தரப்போ, முதல்வரோ வேறு எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக ரங்கசாமியை கடுமையாக விமர்சித்துள்ளது. அதிமுக கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் சமூக வலைதளத்தில் நடிகர் விஜய்யை முதல்வர் ரங்கசாமி சந்தித்தது தொடர்பாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்:

"முதல்வர் ரங்கசாமிக்கு புதுவை மக்கள் மீது அக்கறை இல்லையா? மாநிலத்தின் வளர்ச்சி திட்டத்திற்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை சந்திக்க நேரம் இல்லை. அதிமுக வாக்கு பெற்று முதல்வரானவருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவிக்க கூட வழி தெரியவில்லை.

நடிகரை மட்டும் மரியாதை நிமித்தமாக சந்திக்க நேரம் இருக்கிறதா.?" என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், "முதல்வர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். அது தனிப்பட்ட விவகாரம். கூட்டணி தொடர்பாக சந்தித்ததாக முதல்வர் ஏதும் கூறவில்லை. அரசியல் ரீதியாக சந்தித்தாரா என ஊகங்களுக்கு பதில் தர முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in