

புதுச்சேரி: அனைத்து ஆளுநர்களுமே திறமைசாலிகள், ஒரு பிரச்சினையை எப்படி அணுக வேண்டும் என்று தெரிந்தவர்கள் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கதிர்காமம் முத்து மாரியம்மன் கோயிலில் செடல் உற்சவத்தில் ஆளுநர் தமிழிசை பங்கேற்றார். பின்னர் அருகிலுள்ள முருகன் கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்தார். அதையடுத்து முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் பக்தர்களுக்கான அன்னதான நிகழ்வை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை கூறியதாவது:
"நீட் தேர்வில் விலக்குக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுருக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆளுநர் சில கருத்துக்களை சொல்லி இருக்கிறார் சட்டப்பேரவைத் தலைவர் முடிவை எடுக்கலாம். எந்த மசோதாவாக இருந்தாலும் திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஆளுநர்கள் எதிராக இருப்பார்கள் கைப்பாவையாக இருப்பார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அனைத்து ஆளுநர்களுமே திறமைசாலிகள் , ஒரு பிரச்சினையை எப்படி அணுக வேண்டும் என்று தெரிந்தவர்கள். இவ்விஷயத்தில் ஆளுநர் அவரது உரிமையை பயன்படுத்தி உள்ளார்.
மக்களுக்கு நல்லது இல்லை என்றாலும் ஒரு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பலாம். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக தமிழக ஆளுநர் நடந்தார் என்பது சரியாகாது."
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.