

ஈரோடு: வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார். கடந்த சில நாட்களாக, பல்வேறு அரசு திட்ட விழாக்கள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கட்சியினரிடம் நேர்காணல் மற்றும் கூட்டணிக் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை என பல்வேறு நிகழ்வுகளில் அமைச்சர் முத்துசாமி பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமைச்சர் முத்துசாமிக்கு லேசான காய்ச்சலும், உடல் சோர்வும் இருந்தது. இதை தொடர்ந்து அவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இன்று காலை அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான அறிகுறியே இருந்ததால், மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது
அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
அமைச்சர் முத்துசாமி ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளதால் பெரிய அளவு பாதிப்பு இல்லை என தெரிவித்த கட்சியினர், அமைச்சருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.